Tiruvannamalai Girivalam Ashtalingam: தி-மலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம்! அள்ளி கொடுக்கும் பலன்கள்!
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என 8 லிங்கங்கள் உள்ளன.
Tiruvannamalai
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழ்வது திருவண்ணாமலை. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் சுற்றுவட்டப்பாதையை பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்காக பக்தர்கள் பக்தியுடன் சுற்றி வருகின்றனர். இந்த கிரிவலப்பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்க சன்னதிகள் அமைந்துள்ளன. இந்த அஷ்ட லிங்கத்தை வழிப்பட்டால் என்னென்ன பயன்கள் என்பதை பார்ப்போம்.
Indra Lingam
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கிரிவலம் தொடங்கியதுமே முதலில் அமைந்திருப்பது இந்திர லிங்கம். கிழக்கு திசையில் அமைந்திருக்கும் இங்கு ஐராவதம் எனும் யானையின் மூலம் கேட்பதையெல்லாம் பக்தர்களுக்கு வாரி வழங்குகிறார் இந்திர தேவன். கையில் வஜ்ராயுதம் தாங்கியவராக அருள்தருகிறார். இந்த லிங்கத்தை வழிபட்டால் செல்வம் பெருகும். பதவி உயர்வு, பணியிட மாற்றம் போன்றவைகள் கிடைக்கும்.
Agni Lingam
கிரிவல பாதையில் 2வது லிங்கமாக இருப்பது அக்னி லிங்கம். தென்கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கிரிவலப்பாதையில் மற்ற அனைத்து லிங்கங்களும் வலது புறம் அமைந்திருக்க, அக்னி லிங்கம் மட்டுமே இடப்புறம் அமைந்திருக்கும். இந்த அக்னி லிங்கத்தை வழிப்பட்டால் நோய், பிணி, பயம் முதலியன விலகும். எதிரிகள் தொல்லை இருக்காது.
Yama Lingam
கிரிவல பாதையில் 3வது லிங்கம் எமலிங்கம். எமராஜன் அங்கபிரதட்சணமாக கிரிவலம் சென்று சிவனை வழிபட்டார். அவர் கிரிவலம் நிறைவு செய்த இடத்தில் தாமரை மலர்ந்தது. அதிலிருந்து ஜோதிமயமான ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே எமலிங்கம் என்று வரலாறு கூறுகிறது. எம லிங்கம். தென் திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த லிங்கத்தை வழிப்பட்டால் பொருளாதார கஷ்டங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும். சகோதரர்களின் உறவு நீடிக்கும்.
Nairuthi Lingam
கிரிவல பாதையில் 4வது லிங்கமானது நிருதி லிங்கம். தென் கிழக்கு திசையில் அமைந்துள்ளது. ஹரியை நிருதீஸ்வரர் வலம் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது கிரிவல மலையின் தென்மேற்கு திசையில் ஒரு குழந்தையின் அழுகுரலும், பெண்ணின் சலங்கை ஒலியும் கேட்டது. அந்த இடத்தைநோக்கி நிருதீஸ்வரர் சென்றார். அவர் எதிரில் பிரதிரூப லிங்கம் தோன்றியது. அதுதான் நிருதிலிங்கம். இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜென்ம சாபங்கள் நீங்கும். புகழ் கிடைக்கும்.
Varuna Lingam
கிரிவல பாதையில் 5வது லிங்கமானது வருண லிங்கம். இது மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. நீருக்கு அதிபதியான வருணபகவான், அக்னி வடிவமான அண்ணாமலையை முழங்கால் பிரதட்சணமாகவும், ஒற்றைக்கால் பிரதட்சணமாகவும் கிரிவலம் வந்து வழிபட்டார். அப்போது வருண பகவானுக்கு சிவ பெருமான் நீரின் வடிவில் காட்சி கொடுத்த இடத்தில் வருண லிங்கம் உருவானது. இந்த லிங்கத்தை வழிபட்டால் கொடிய நோயிலிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.
Vayu Lingam
கிரிவல பாதையில் 6வது லிங்கமானது வாயு லிங்கம். வடமேற்கு திசையில் இந்த லிங்கம் அமைந்துள்ளது. மூச்சுக்காற்றை நிலை நிறுத்தியபடியே வாயுபகவான் கிரிவலம் சென்றார். அப்போது அடிஅண்ணாமலை அருகே சுகந்தமான நறுமணம் வீசியது. அதுவரை மூச்சை நிறுத்தி வலம் வந்த வாயுபகவான் நிலைதடுமாறினார். அங்கு பஞ்சக்ருத்திகா மலர்களின் நடுவே சுயம்பாக லிங்க வடிவில் சிவன் காட்சி அளித்தார். அதுவே வாயுலிங்கம். இந்த லிங்கத்தை வழிபட்டால் கண் திருஷ்டி, இதய நோய்கள் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.
Kubera lingam
கிரிவல பாதையில் 7வது லிங்கமானது குபேர லிங்கம். இந்த லிங்கம் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. எல்லா செல்வங்களுக்கும் அதிபதியானவர் குபேரன். ஆனால் ஆண்டியான சிவனின் அருள் வேண்டி குதிகால் நடையுடன் குபேரன் கிரிவலம் சென்று வழிபட்டார். அப்போது விஷ்ணுவும், லட்சுமியும் சேர்ந்து அண்ணாமலையாரை சக்ரபாணி செய்யும் காட்சியை குபேரன் தரிசித்தார். அந்த இடத்தில் சுயம்புவாக தோன்றியதே குபேர லிங்கம். இந்த லிங்கத்தை வழிப்பட்டால் செல்வம் செழிக்கும்
Easanya Lingam
கிரிவல பாதையில் கடைசியாக அதாவது 8வது லிங்கமானது ஈசான்யா லிங்கம். வடகிழக்கு திசையில் இந்த லிங்கம் அமைந்துள்ளது. கண்களை மூடியபடி ருத்திர முனிவர் கிரிவலம் சென்றார். அப்போது ஈசான்ய மூலையில் ஒருவரின் அழுகுரல் கேட்டது. அங்கு சென்றபோது சுயம்பு லிங்கமாக காட்சியளித்தது. இந்த லிங்கத்தை வழிபாடு செய்தால் மனம்ஒருநிலை அடையும். வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் கை கூடும்.