Mettur : கிடு, கிடுவென உயர்ந்த நீர் வரத்து.! கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீர் அளவு என்ன.?
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைந்த நிலையில் மீண்டும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் வரை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 8ஆயிரம் கன அடியில் இருந்து 24ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி 20,500 கன அடியாக உள்ளது.
மேட்டூர் அணையும் காவிரி ஆறும்
விவசாயிகளுக்கு முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது காவிரி ஆறாகும். இந்த ஆற்றில் வரும் பொங்கி வரும் நீரை சேமித்து வைக்கும் பொக்கிஷமாக மேட்டூர் அணை உள்ளது. குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் இந்தாண்டு மேட்டூர் அணையில் நீர்மட்டம் அதலபாதாளத்தில் இருந்தது. இதனால் நீரை திறக்க முடியாத நிலை உருவானது. விவசாய நிலமும் வறட்சியை சந்தித்தது.
வெளுத்து வாங்கிய மழை
கர்நாடகா அரசும் தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை தரமறுத்தது. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு 8ஆயிரம் கன அடி நீர் மட்டும் திறந்துவிட்டது. ஆனால் அடுத்த ஒரு சில நாட்களில் கர்நாடகா நீர் பிடிப்பு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியதால் அணைகளில் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்தது. இதனால் வெறு வழியின்றி 2 லட்சம் கன அடி அளவிற்கு நீர் திறக்கப்பட்டது. தமிழக எல்லைக்கு பொங்கிவந்த காவிரி ஆற்றால் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.
குறைந்த நீர் வரத்து மீண்டும் அதிகரிப்பு
இதனால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. காவிரி கரையோ மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கர்நாடகா நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததையடுத்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. கடந்த வாரம் 8ஆயிரம் கன அடி அளவிற்கு நீர் திறக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Mettur Dam
சுற்றுலா பயணிகளுக்கு தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 19 ஆயிரம் கன அடியில் இருந்து 24 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் பிலிகுண்டு காவிரி ஆற்றில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 26 நாட்களாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை தொடர்கிறது. அதே நேரத்தில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தற்போது 20ஆயிரத்து 500 கன அடி அளவிற்கு நீர் வரத்து வந்து கொண்டுள்ளது.