காக்கி உடையில் கள்ளக்காதல்.. 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பம்.!
மதுரையில் 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து ரயில்வே பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பாலையைச் சேர்ந்தவர் சுப்புராஜ்(40). பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி(30). இவர்களுக்கு காளிமுத்து ராஜா (8) என்ற மகனும், பவித்ரா (7) என்ற மகளும் இருந்தனர். ஜெயலட்சுமி மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் சமீபத்தில் திருச்சி ரயில்வே காவல் நிலையத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.
இதனால் ஜெயலட்சுமி மன உளைச்சல் ஏற்பட்டு கடந்த சில நாட்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது இரு பிள்ளைகளுடன் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். ரயில் மோதிய வேகத்தில் 3 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிதறி கிடந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் பணியிட மாறுதலால் மன உளைச்சல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்டது. இந்த வழக்கில் தற்போது திடீர் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில்;- மதுரையில் ரயில்வே பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக வேலை பார்த்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மனைவியை பிரிந்து வாழ்ந்து சொக்கலிங்க பாண்டியன் (47) என்பவருடன், ரயில்வே போலீசாக வேலை பார்த்த ஜெயலட்சுமிக்கு கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் ஜெயலட்சுமி கணவர் சுப்புராஜ்க்கு தெரியவந்ததை அடுத்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சொக்கலிங்கப்பாண்டியன் செங்கோட்டைக்கு பணி மாறுதலாகி சென்றபோது, அங்கு பணிபுரியும் மற்றொரு பெண் காவலருடன் தொடர்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஜெயலட்சுமிக்கும், சொக்கலிங்கப்பாண்டியனுக்கும் கடந்த 20ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஜெயலட்சுமி இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த சொக்கலிங்கப்பாண்டியன் மனவேதனையில் இருந்து வந்தார்.
இதனையடுத்து, சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்த போது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய தூத்துக்குடி ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சொக்கலிங்க பாண்டியன் உடலை அனுப்பி வைத்தனர்.இரண்டு தற்கொலை சம்பவங்கள் குறித்தும் வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.