ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "தர்பார்" திரைப்படம் பொங்கல் விருந்தாக இன்று வெளியாகியுள்ளது.  சூப்பர் ஸ்டார் ஆதித்யா அருணாச்சலம் என்ற காவல் துறை அதிகாரியாக  நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

உலகம் முழுவதும் 7 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள "தர்பார்" படத்தின் பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோவைக் காண ரசிகர்கள் நேற்று இரவு முதலே ஆர்வமாக காத்திருக்கின்றனர். தியேட்டர் வாசல்களில் தோரணம், பிரம்மாண்ட கட்அவுட், பேனர்கள் என ரஜினி ரசிகர்கள் செம்ம மாஸ் காட்டி வருகின்றனர். மேலும் பல தியேட்டர்களில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் "தர்பார்" பட ரிலீஸை கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், திண்டுக்கல்லில் மட்டும் "தர்பார்" படம் ரிலீஸ் செய்யப்படவில்லை. விநியோகஸ்தர் பிரச்சனை காரணமாக "தர்பார்" படம் ரிலீஸ் ஆகவில்லை எனக்கூறப்படுகிறது. இதையறிந்த ரஜினி ரசிகர்கள் நேற்று இரவிலிருந்தே கொல காண்டில் சாலைகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

’ஆதித்யா அருணாச்சலத்தை பார்த்தாகவும்’, ’வேண்டும், வேண்டும், தர்பார் வேண்டும்’ போன்ற கோஷங்களை எழுப்பிய படி போராட்டத்தில் ஈடுபட்டனர். விநியோகஸ்தர்கள் பிரச்சனைக்காக ரசிகர்கள் பாதிக்கப்படுவதாகவும், FDFS காட்சியை திண்டுக்கல்லில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஒரு பக்கம் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர்கள் நள்ளிரவிலும் நடுரோட்டில் அமர்ந்து போராடி வரும் சமயத்தில்,  #DarbarinDindigul என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தியும் லைகா, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருக்கு கோரிக்கைகள் பறந்துள்ளன.