'பரியேறும் பெருமாள்' பட நடிகருக்கு சொந்த வீடு... மகளுக்கு அரசு பணி..! மாவட்ட ஆட்சியர் செய்த அதிரடி செயல்..!
'பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞர் தங்கராசு, தங்க சரியான வீடு இல்லாமலும், வயிறார சாப்பிட கூட வழி இல்லாமல் இருக்கும், தன்னுடைய அவல நிலை கூறியதை தொடர்ந்து, அவருக்கு மாவட்ட ஆட்சியர், வீடு கட்டி கொடுக்க ஏற்பாடு செய்தும், அவரது மகளுக்கு வேலையும் வழங்கியுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வன் இயக்கத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. சமூகத்தில் முக்கிய பிரச்சனை ஒன்றை பேசும் படமாக இந்த படத்தை இயக்கி பலரது பாராட்டுகளையும் பெற்றார் இயக்குனர். இந்த படத்தை, இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் புரோடுக்ஷன் சார்பில் தயாரித்திருந்தார்.
கதிர், கயல் ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில்... நாயகனாக நடித்த கதிரின் தந்தையாக நடித்திருந்தவர் நாட்டுப்புற கலைஞர் தங்கராசு.
தன்னுடைய 17 வயதில் இருந்தே தெரு கூத்தையே நம்பி பிழைத்து வரும் தங்கராசு, சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பெண் வேடம் போட்டு தெரு கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். இவரது திறமையை பார்த்து வியர்ந்த, மாரி செல்வராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் இவரை நடிக்கவும் வைத்தார்.
ஒரு சூப்பர் ஹிட் படத்தில் நடித்த போதும் கூட, இவருக்கு அடுத்து எந்த படத்திலும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 65 வயதுக்கு மேல் ஆகி விட்டதால் தெரு கூத்துகளில் வேடம் கட்டி ஆடுவதையும் நிறுத்திவிட்டார்.
கஷ்டப்பட்டாலும், தன்னுடைய இரு மகள்களையும் நன்கு படிக்க வைத்துவிட்டார். மேலும் வீடு மோசமாக சிதிலமடைந்தும், மின்சார வசதி, பாத்ரூம் வசதி என எதுவும் இல்லாததால் இவரது மகள்கள் இருவரும் உறவினர்கள் வீட்டில் தான் வசித்து வருகிறார்கள்.
குடும்ப கஷ்டத்திற்காக மனைவியுடன் சேர்ந்து, எலுமிச்சை, பணைக்கிழங்கு என தன்னுடைய கிராமத்தில் கிடைக்கும் சிலவற்றை விற்று பிழைப்பு நடத்தி வந்தார். ஆனால், கொரோனா காலம் இவரை வியாபாரத்தையும் முடக்கி போட்டது. அதே நேரத்தில் சமீபத்தில் பெய்த மழையால் இவரது வீடு உள்ளே தண்ணீர் புகுந்து, மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.
வேலை இருந்தால் ஒரு வேளையாவது உணவு கிடைத்து வந்த நிலையில், தற்போது ஒரு வேளை கூழ் மட்டுமே உணவாக உண்ணுவதாக கூறி நெஞ்சை உறைய வைத்தார் தங்கராசு.
தங்கராசுவின் ஏழ்மை நிலை குறித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவின் கவனத்துக்கு கொண்டு சென்றது. இதையடுத்து, தாசில்தார் ஒருவரை அனுப்பி தங்கராசுவின் வீட்டை ஆய்வு செய்து சரி செய்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை பெற்றுள்ளார். விரைவில், தங்கராசு அவர்களின் பழுதான வீட்டை சரிசெய்வதோடு, அவரின் மகளுக்கும் வேலை வாங்கி தருவதாகவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்த நிலையில்.
தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே, தங்கராசுவின் மகளுக்கு தற்காலிக பணி வழங்கியுள்ளார். மேலும் விரைவில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு கட்டி தர ஏற்பாடு செய்யப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திரையுலகினர் பக்கத்தில் இருந்த இதுவரை எந்த உதவியும் கிடைக்காத நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர் செய்துள்ள உதவிக்கு மக்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.