இப்போதுதான் முடிவுக்கு வந்தது பிரச்சனை! அதற்குள் தயாரிப்பாளருக்கு மிரட்டல்? வடிவேலு பற்றி தீயாய் பரவும் தகவல்!
நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடை, சுமூக பேச்சுவார்த்தைகள் மூலம் நீக்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டு தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்பிரச்சனை முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அடுத்த பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் காமெடியை வசனமாக மட்டும் வெளிப்படுத்தாமல், தன்னுடைய உடல் மொழியாலும் வெளிப்படுத்தி, ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் வடிவேலு.
இவர் 10 வருடங்கள், சரியான வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடியது இவரது பொறாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். எப்போது இவரது பிரச்சனைக்கு தீர்வு வரும் என, அஜித், விஜய், ரஜினி, கமல் என அனைத்து முன்னணி ரசிகர்களின் ரசிகர்களும் காத்திருந்த நிலையில் கடந்த வாரம் திடீர் என, தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வடிவேலு மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டதாக அறிவித்தது.
இந்த தகவல் ஒட்டு மொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய செய்தது. வடிவேலுவை ரசிகர்கள் வாழ்த்தி வரவேற்றனர்.
பின்னர் இதுகுறித்து நடிகர் வடிவேலுவும், ரெட் கார்டு நீக்க பட்டது சினிமாவில் எனக்கு கிடைத்த மறுபிறவி என்றும், என் மீதான தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
தன்னுடைய அடுத்த படமாக, இயக்குனர் சுராஜ் இயக்கும் 'நாய் சேகர்' படம் இருக்கும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் நடிக்கவுள்ளதாகவும், இரண்டு படங்களில் மட்டுமே நாயகனாக நடித்து விட்டு, மீண்டும் காமெடியில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஒருவழியாக, ரெட் கார்டு பிரச்சனை முடிவுக்கு வரவே... அடுத்தடுத்து வடிவேலு படங்களில் கமிட் ஆகி வருவதாகவும் தகவல் வெளியான நிலையில், தற்போது தயாரிப்பாளர் ஒருவரை மிரட்டி அடுத்த சர்ச்சையில் வடிவேலு சிக்கியுள்ளார்.
நடிகர் வடிவேலு நடிக்க உள்ள நாய் சேகர் படம் குறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், அடிக்கடி இதுகுறித்த தகவல் வெளியாகி வந்தது. ஆனால் படத்திற்கு தலைப்பை சுராஜ் உறுதி செய்த போதிலும் அதனை முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யவில்லை. எனவே, பிகில் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ள ஏ.ஜி.எஸ் நிறுவனம் சதீஷை நாயகனாக வைத்து தயாரித்து வரும் படத்திற்கு 'நாய் சேகர்' என பெயர் வைத்து அதனை முறையாக பதிவும் செய்துள்ளனர்.
இந்த தகவல் வடிவேலு படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனவே இந்த படத்தின் டைட்டிலை தன்னிடம் கொடுத்து விடுமாறு வடிவேலு ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு போன் செய்து கேட்டுள்ளார்.
ஆனால் தங்களின் படத்திற்கு அந்த தலைப்பு தான் சரியாக இருக்கும் என, ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் உள்ளவர்கள் தலைப்பை கொடுக்க மறுத்துள்ளனர். ஆரம்பத்தில் பொறுமையாக பேசிய வடிவேலு பின்னர் தயாரிப்பாளரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் 'நாய் சேகர்' தலைப்பை விட்டுக்கொடுக்கவில்லை என்றால், செய்தியாளர்களை அழைத்து 'நாய் சேகர்' என்னுடைய படம் என கூற வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த தகவ தற்போது சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
'நாய் சேகர்' என்கிற டைட்டிலே அந்த வேடத்தில் நடித்து பிரபலமான, வடிவேலுவுக்கு தான் பொருந்தும் என்பது அனைவரும் அறிந்தது தான்... ஆனால் அதை கூட தன்மையாக தானே கேட்க வேண்டும்... மிரட்டல் வேண்டாமே என நெட்டிசன்கள் தங்களது கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.