கல்லூரியில் சேர வசதி இல்லையா? ஆன்லைனில் எளிமையாக ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கலாம்!
பள்ளிப்படிப்பை முடித்த ஏழை, எளிய மாணவ மாணவிகள் கல்லூரி படிப்பைத் தொடர மத்திய அரசு உதவித்தொகை வழங்குகிறது. இதற்கு ஆன்லைனில் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
12ஆம் வகுப்பில் 80 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் கல்லூரி படிப்பைத் தொடர மத்திய அரசு உதவித்தொகை வழங்குகிறது. எளிமையாக ஆன்லைனில் விண்ணப்பித்து இந்தக் கல்வி உதவித்தொகையை பெறலாம்.
ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிப் படைப்பை முடித்ததும் கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வியைத் தொடர மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த உதவித்தொகை பெற 80 மதப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
டிப்ளோமா அல்லது தொலைதூர கல்வி மூலம் பட்டப்படிப்பை மேற்கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேசிய அங்கீகாரம் பெற்ற பள்ளியில் படித்திருக்க வேண்டும். மாநில அளவில் வேறு எந்த உதவித்தொகையும் பெறாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப வருமானம் 4.5 லட்சத்திற்குள் இருக்கவேண்டும்.
உதவித்தொகையை பெறும் மாணவர்கள் விரும்பினால் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தை மாற்றிக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் உதவித்தொகை பெறுவதை உறுதி செய்ய தேர்வுகளில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருப்பதையும் 75 சதவீதம் வருகைப்பதிவு இருப்பதும் அவசியம். கல்லூரியில் படிக்கும்போது எந்தவிதமான ஒழுங்கீன செயலிலும் சிக்காமல் இருக்க வேண்டும்.
இளநிலை பட்டப்படிப்புக்கு இந்த உதவித்தொகையைப் பெற்றவர்கள் மட்டும் தொடர்ந்து முதுகலை படிப்புக்கும் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் சான்றிதழ், ஆதார் கார்டு, நற்சான்றிதழ், வகுப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
https://scholarships.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று மட்டுமே விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அரசின் அறிவிப்பிற்கு பிறகே விண்ணப்பிக்க முடியும். இந்த ஸ்காலர்ஷிப் மூலம் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.