ஐயோ.. மீண்டும் ஒரு இடியை இறக்கிய மெட்டா.." 1500 பேரின் வேலை காலி! காரணம் இதுதான்!
Meta மெட்டா நிறுவனம் 1500 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. ரியாலிட்டி லேப்ஸ் பிரிவில் நடக்கும் இந்த அதிரடி மாற்றத்திற்கான காரணம் மற்றும் பின்னணி விவரங்கள்.

Meta
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா (Meta), மீண்டும் ஒரு பெரிய பணிநீக்க நடவடிக்கைக்குத் தயாராகி வருகிறது. இம்முறை அந்நிறுவனத்தின் கனவுத் திட்டமான 'ரியாலிட்டி லேப்ஸ்' (Reality Labs) பிரிவில் பணியாற்றும் சுமார் 1500 ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த அணியில் சுமார் 15,000 பேர் பணியாற்றி வரும் நிலையில், அதில் கிட்டத்தட்ட 10 சதவீதத்தினரை வீட்டுக்கு அனுப்ப மெட்டா முடிவு செய்துள்ளது.
ஊழியர்களின் வயிற்றில் அடித்த AI தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அசுர வளர்ச்சியால் ஏற்படும் வேலை இழப்புகளை இந்த நடவடிக்கை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. திடீரென வேலை பறிபோகும் இந்தச் சூழல் ஊழியர்களுக்கு மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் குடும்பம், சம்பளம் மற்றும் எதிர்காலம் குறித்த பயம் ஊழியர்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது. AI தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளை மெல்ல மெல்ல ஆக்கிரமித்து வருவதையே இது காட்டுகிறது.
உறுதியான தகவல்: முக்கிய மீட்டிங்கில் வெளியான சேதி
இந்தத் தகவல் வெறும் வதந்தி அல்ல என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மெட்டாவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) ஆண்ட்ரூ போஸ்வொர்த், ரியாலிட்டி லேப்ஸ் ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது ஆண்டின் "மிக முக்கியமான கூட்டம்" (Most important meeting) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில்தான் பணிநீக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காணாமல் போகும் 'மெட்டாவர்ஸ்' கனவு?
மெட்டாவின் ரியாலிட்டி லேப்ஸ் பிரிவுதான் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) மற்றும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி (AR) சாதனங்களை உருவாக்குகிறது. குவெஸ்ட் ஹெட்செட்டுகள் (Quest headsets), ரே-பான் ஸ்மார்ட் கிளாஸ்கள் மற்றும் மெட்டாவர்ஸ் (Metaverse) திட்டங்கள் இவர்களுடையதுதான். ஆனால், கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் குறைப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், மெட்டாவர்ஸ் மீதான ஆர்வம் குறைந்து வருவதைக் காட்டுகிறது. இனி மெட்டாவர்ஸ் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை இல்லை என்பது தெளிவாகிறது.
மார்க் ஜூக்கர்பெர்க்கின் புதிய 'AI' திட்டம்
மெட்டாவர்ஸ் கனவை ஓரம் கட்டிவிட்டு, மார்க் ஜூக்கர்பெர்க் இப்போது தனது முழுக் கவனத்தையும் AI பக்கம் திருப்பியுள்ளார். இதற்காகப் பெரிய அளவில் முதலீடுகளைக் கொட்டி வருகிறார். "மெட்டா கம்ப்யூட்" (Meta Compute) திட்டத்தின் கீழ், பல பெரிய நகரங்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு மின்சாரத்தை உறிஞ்சக்கூடிய பிரம்மாண்டமான டேட்டா சென்டர்களை (Data Centres) அமைக்கத் திட்டமிட்டுள்ளார். எந்திரங்களை நம்பி மனிதர்களைக் கைவிடும் உத்தியாகவே இது பார்க்கப்படுகிறது.
எந்திரங்கள் மலிவு... மனிதர்கள் விலை அதிகம்?
மெட்டா தனது AI சாம்ராஜ்யத்தைக் கட்டமைக்கும் வேகத்தில், பல திறமையான ஊழியர்கள் நருக்கி எறியப்படுகிறார்கள். பல வருட அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் கூட இந்தத் தானியங்கி மயம் (Automation) மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர் மோகத்தால் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். எந்திரங்கள் மனிதர்களை விட மலிவானவை என்று நிறுவனங்கள் கருதுவதால், நடுத்தர வர்க்க ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைக்கப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

