மாணவர்களுக்கு ஜாக்பாட்! இஸ்ரோவில் 2 வாரம் இலவச பயிற்சி - முழு விபரம் இதோ!
ISRO 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான இஸ்ரோவின் இலவச 'யுவிகா 2026' விண்வெளி பயிற்சி திட்டத்திற்கு பிப். 27 முதல் விண்ணப்பிக்கலாம். தகுதிகள் என்ன? முழு விவரம் உள்ளே!

ISRO
சிறு வயதில் வானத்தைப் பார்த்து வியக்காத குழந்தைகளே இருக்க முடியாது. "நானும் ஒரு நாள் விண்வெளிக்கு போவேன்," என்று சொல்லும் மாணவர்களின் கனவை நனவாக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஒரு சூப்பரான திட்டத்தை அறிவித்துள்ளது. அதுதான் 'யுவிகா 2026' (YUVIKA - Young Scientist Programme). ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இந்த இரண்டு வார இலவச உறைவிடப் பயிற்சி முகாம், எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்கும் ஒரு அருமையான வாய்ப்பாகும்.
"Catch them young" அதாவது இளம் வயதிலேயே திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த துறைகளில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக இஸ்ரோ இந்த திட்டத்தை 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த முகாமில் மாணவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடலாம், விண்வெளி ஆய்வகங்களைப் பார்வையிடலாம் மற்றும் பல செய்முறைப் பயிற்சிகளில் ஈடுபடலாம்.
முக்கிய தேதிகள் மற்றும் தகுதிகள் என்ன?
இந்த ஆண்டுக்கான (2026) 'யுவிகா' பயிற்சிக்கு பிப்ரவரி 27 முதல் மார்ச் 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 1, 2026-ம் தேதியின்படி இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மே 11 முதல் மே 22 வரை பெங்களூரு, ஸ்ரீஹரிகோட்டா மற்றும் திருநெல்வேலி அருகே உள்ள மகேந்திரகிரி உட்பட இஸ்ரோவின் 9 முக்கிய மையங்களில் இந்த இரண்டு வாரப் பயிற்சி நடைபெறும்.
மாணவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
இந்த பயிற்சிக்குத் தேர்வாக எந்த நுழைவுத் தேர்வும் இல்லை! மாணவர்களின் 8-ம் வகுப்பு மதிப்பெண்கள் (50%), ஆன்லைன் வினாடி வினா (10%), அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்பு (10%), என்.சி.சி / என்.எஸ்.எஸ் (NCC/NSS) மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற சான்றிதழ்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மெரிட் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்தும் சமமான அளவில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.
கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் இலவச வசதிகள்
குக்கிராமத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பு சென்று சேர வேண்டும் என்பதற்காக, பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தேர்வில் 15% கூடுதல் வெயிட்டேஜ் (Weightage) வழங்கப்படுகிறது. தேர்வாகும் மாணவர்களுக்கான தங்குமிடம், உணவு, பயிற்சி உபகரணங்கள் என அனைத்துச் செலவுகளையும் இஸ்ரோவே முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. அதுமட்டுமின்றி, மாணவர்கள் வந்து செல்வதற்கான இரண்டாம் வகுப்பு ஏசி (II AC) ரயில் அல்லது பேருந்து கட்டணமும் திருப்பி வழங்கப்படும்!

