இன்று நடைபெறவிருந்த சிஏ தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! என்ன காரணம்?
காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஆபரேஷன் சந்தூர்
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பகுதியில்சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் சரமாரி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளிட்ட 9 இடங்களில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவ நிலைகளும், பொதுமக்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்திய ராணுவம் எதிர் தாக்குதல்
ஆனால் பாகிஸ்தான் ராணுவமோ இந்திய ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதலில் இறங்கியது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களில் இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் எல்லைக்கு அப்பால் இருந்து தாக்குதலை அரங்கேற்றியது. அவற்றை இந்திய ராணுவம் முறியடித்து தோல்வி அடைய செய்தது. இதனையடுத்து இந்திய ராணுவம் எதிர் தாக்குதலை மேற்கொண்டு பாகிஸ்தானை நிலை குலைய செய்தது.
சிஏ தேர்வு ஒத்திவைப்பு
இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், பல மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. மேலும் அரசு வேலை செய்பவர்களின் விடுமுறை ரத்து, மின்தடை உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பட்டயக் கணக்காளருக்கான சிஏ தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருத்தப்பட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும்
இதுதொடர்பாக ஆனந்த்குமார் சதுர்வேதி வெளியிட்டுள்ள அறிக்கையில்: நாடு முழுவதும் இன்று தொடங்கி மே 14ம் தேதி வரை நடத்தப்படவிருந்த CA எனப்படும் பட்டயக் கணக்காளர்கள் தேர்வுகள் ஒத்திவைப்படவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட தேதி அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.