- Home
- Career
- ஐஐடி-மெட்ராஸ் இந்த கோர்ஸ் படிச்சீங்கனா பெரிய தொழிற்சாலைகளில் 100% வேலை உறுதி: என்ன படிப்பு தெரியுமா?
ஐஐடி-மெட்ராஸ் இந்த கோர்ஸ் படிச்சீங்கனா பெரிய தொழிற்சாலைகளில் 100% வேலை உறுதி: என்ன படிப்பு தெரியுமா?
ஐஐடி-மெட்ராஸ் தொழில்துறை நிபுணர்களுக்காக இந்தியாவின் முதல் செயல்முறை பாதுகாப்பு முதுகலை டிப்ளோமாவை அறிமுகப்படுத்துகிறது. தொழில்துறை பாதுகாப்பை மேம்படுத்த மே 31க்குள் விண்ணப்பிக்கவும்.

IIT Madras
தொழிற்சாலை பாதுகாப்பு தரநிலைகளை வலுப்படுத்தும் ஒரு முன்னோடி முயற்சியாக, இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (ஐஐடி-எம்), செயல்முறை பாதுகாப்பில் நாட்டின் முதல் முதுகலை டிப்ளோமா படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த படிப்பு குறிப்பாக பணிபுரியும் நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. உற்பத்தி, சுரங்கம், எரிசக்தி, இரசாயனப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற பல்வேறு துறைகளில் விபத்துகளைத் தடுப்பதற்கான அறிவு மற்றும் திறன்களை தொழில்துறை பணியாளர்களுக்கு வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ஐஐடி-எம் வெளியிட்ட அறிக்கையின்படி, "வெளியீடு மற்றும் டிஜிட்டல் கல்வி மையம் (CODE) மூலம் வழங்கப்படும் இந்த தனித்துவமான டிப்ளோமா ஆன்லைன் முறையில் நடத்தப்படும். இது பணிபுரியும் நிபுணவர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும். இரசாயனம், இயந்திரவியல், சிவில், மின்சாரம், கருவிமயமாக்கல் அல்லது பெட்ரோலியம் பொறியியல் போன்ற துறைகளில் பி.இ./பி.டெக் பட்டம் பெற்றவர்களும், குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் எம்.எஸ்.சி. வேதியியல் பட்டதாரிகளும் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்."
மேலும், இந்த முயற்சியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள பாடநெறி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜகோபாலன் ஸ்ரீனிவாசன் கூறுகையில், "2024 ஆம் ஆண்டு IndustriALL Global Union வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவின் தொழில்துறை துறைகளில் 240க்கும் மேற்பட்ட பணியிட விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 850 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவங்களுக்கு முக்கிய காரணம் போதுமான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் போதிய பயிற்சி இல்லாமையே ஆகும்."
இந்த டிப்ளோமா திட்டம் மூன்று பருவ முறையை பின்பற்றும். மாணவர்கள் ஒரு பருவத்தில் அதிகபட்சம் மூன்று பாடங்களை எடுத்துக்கொண்டு, ஒரு வருடம் முதல் இரண்டு வருடங்களுக்குள் படிப்பை முடிக்க முடியும். "இந்த பாடத்திட்டம் கல்வித்திறன் மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகிய இரண்டையும் ஒருங்கிணைக்கிறது. குறிப்பாக அபாயங்களை அடையாளம் காண்பது, இடர் குறைப்பு மற்றும் நவீன பாதுகாப்பு தரநிலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம் உள்ளது. நுழைவுத் தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://code.iitm.ac.in/process-safety என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுத்து, பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்க விரும்பும் நிபுணவர்களுக்கு இந்த முதுகலை டிப்ளோமா ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஐஐடி-மெட்ராஸின் இந்த முன்னெடுப்பு தொழில்துறை பாதுகாப்புக்கு ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.