ஹார்வர்டு, MIT-ல படிக்க ஆசையா? ஒரே சான்ஸ்.. வீட்டில் இருந்தே டேட்டா சயின்ஸ் படிக்கலாம்!
வீட்டில் இருந்தபடியே டேட்டா சயின்ஸ் இலவசமாக கற்றுக்கொள்ள அரிய வாய்ப்பு! ஹார்வர்டு, MIT போன்ற பிரபல நிறுவனங்கள் வழங்கும் ஆன்லைன் படிப்புகள்!

டேட்டா சயின்ஸ் படிப்பு: இலவசமாக கற்றுக்கொள்ள அரிய வாய்ப்பு!
டேட்டா சயின்ஸ் துறையில் ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க விரும்புகிறீர்களா? இனி அதற்கு அதிக பணம் செலவு செய்யத் தேவையில்லை. ஏனெனில், உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களான ஹார்வர்டு பல்கலைக்கழகம், IBM, கூகுள் மற்றும் MIT போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், இலவச ஆன்லைன் படிப்புகளை வழங்குகின்றன. இந்த படிப்புகள் மூலம், டேட்டாவிலிருந்து தகவல்களை எவ்வாறு பெறுவது, அதனை எப்படி பயன்படுத்துவது மற்றும் புதிய தொழில்நுட்பங்களை எவ்வாறு கையாள்வது என்பதை கற்றுக்கொள்ளலாம். சில படிப்புகளில் செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய அடிப்படைக் கல்வியும் கிடைக்கும்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் டேட்டா சயின்ஸ் படிப்பு
ஹார்வர்டு பல்கலைக்கழகம், "Introduction to Data Science with Python" என்ற 8 வார ஆன்லைன் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பைத்தான் (Python) மொழியைப் பயன்படுத்தி டேட்டா சயின்ஸின் அடிப்படை அம்சங்கள் கற்றுத்தரப்படுகின்றன. ரெக்ரெஷன் (Regression) மற்றும் வகைப்பாடு மாதிரிகள் (Classification Models), மெஷின் லேர்னிங் மற்றும் டேட்டா காட்சிப்படுத்தல் (Data Visualization) போன்ற தலைப்புகள் இதில் அடங்கும். இந்த படிப்பு இலவசம் என்றாலும், சான்றிதழ் தேவைப்பட்டால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
IBM நிறுவனத்தின் டேட்டா சயின்ஸ் படிப்பு
IBM SkillsBuild, புதிய மாணவர்களுக்காகவே இந்த படிப்பை வடிவமைத்துள்ளது. இதில், டேட்டாவின் அடிப்படைக் கருத்துகள் எளிமையான மொழி மற்றும் நிஜ உலக உதாரணங்களுடன் விளக்கப்படுகின்றன. சுமார் 20 மணி நேரம் கொண்ட இந்த படிப்பு, டேட்டாவை சுத்தம் செய்தல் (Data Cleaning), பகுப்பாய்வு (Analysis) மற்றும் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை கற்றுத்தருகிறது. மேலும், IBM Watson Studio போன்ற கருவிகளைப் பயன்படுத்தவும் கற்றுக்கொடுக்கிறது. படிப்பு நிறைவடைந்ததும் டிஜிட்டல் பேட்ஜ் (Digital Badge) வழங்கப்படும்.
சிஸ்கோ நிறுவனத்தின் டேட்டா சயின்ஸ் படிப்பு
தொழில்நுட்பத் துறையில் நுழைய விரும்பும் மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்காக சிஸ்கோ (Cisco) நிறுவனம் "Introduction to Data Science" என்ற படிப்பை வழங்குகிறது. இதில், டேட்டாவின் வகைகள், டேட்டா சேகரிக்கும் நுட்பங்கள் மற்றும் அடிப்படைப் பகுப்பாய்வு கற்றுத்தரப்படுகிறது. மேலும், சுகாதாரம், நிதி மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற துறைகளில் டேட்டா எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
MIT வழங்கும் இலவச ஆன்லைன் பாடங்கள்
MIT (Massachusetts Institute of Technology) நிறுவனம், "Introduction to Computational Thinking and Data Science" என்ற படிப்பை வழங்குகிறது. இது, நிரலாக்கத்தைப் பற்றி குறைந்த அறிவு உள்ள மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில், பைத்தான் மொழியைப் பயன்படுத்தி, சிமுலேஷன் (Simulation), ஆப்டிமைசேஷன் (Optimization) மற்றும் புள்ளியியல் பகுப்பாய்வு (Statistical Analysis) போன்றவை கற்றுத்தரப்படுகின்றன. இந்த படிப்பில் விரிவுரைகள், பயிற்சிகள் மற்றும் இறுதித் தேர்வும் அடங்கும்.
கூகுள் கிளவுட் வழங்கும் டேட்டா சயின்ஸ் தளம்
கூகுள் கிளவுட் (Google Cloud) டேட்டா சயின்ஸ் கற்பதற்கு சிறந்த தளத்தை வழங்குகிறது. இங்கு, டேட்டாவை செயலாக்கம் செய்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் மெஷின் லேர்னிங் மாடல்களை உருவாக்குதல் பற்றி கற்றுக்கொள்ளலாம். இதில், பிக்புவெரி (BigQuery), வெர்டெக்ஸ் AI மற்றும் லுகர் ஸ்டுடியோ (Looker Studio) போன்ற கருவிகளைப் பயன்படுத்துவது எப்படி என கற்பிக்கப்படுகிறது. கூகுள் கிளவுட் தளத்தில், ஆரம்பநிலை முதல் மேம்பட்ட நிலை வரை பல்வேறு வளங்கள் கிடைக்கின்றன.