- Home
- Career
- CBSE Results :10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களே தயாரா? இந்த தேதியில் தான் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு
CBSE Results :10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களே தயாரா? இந்த தேதியில் தான் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025 இந்த தேதியில் வெளியாகலாம்! கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் மற்றும் முக்கிய தகவல்கள் இங்கே.

இந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கின. 10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 18ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 4ஆம் தேதியும் நிறைவடைந்தன. இந்த ஆண்டு சுமார் 42 லட்சம் மாணவர்கள் இந்தியாவில் 7842 தேர்வு மையங்களிலும், மேலும் 26 வெளிநாடுகளிலும் தேர்வெழுதியுள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்திய 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், அதாவது மே 13ஆம் தேதியன்று இரு வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நடைபெற்ற 10ஆம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் இருந்து சுமார் 22.39 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதில் 93.6 சதவீத மாணவர்கள் (20.95 லட்சம் பேர்) தேர்ச்சி பெற்றனர். 2023ஆம் ஆண்டின் தேர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது இது 0.48 சதவீதம் marginal அதிகரிப்பாகும். சென்ற ஆண்டு, மாணவிகளை விட மாணவர்கள் சுமார் 2 சதவீதம் குறைவாக தேர்ச்சி பெற்றிருந்தனர்.
மேலும், கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வில் சுமார் 2.12 லட்சம் மாணவர்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களையும், 47,983 மாணவர்கள் 95 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களையும் பெற்றனர். இது 2023ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களான 44,297 மாணவர்களை விட அதிகம். பள்ளிகள் வாரியாகப் பார்க்கும்போது, ஜவஹர் நவோதயா வித்யாலயா (JNV) மற்றும் கேந்திரிய வித்யாலயா (KV) பள்ளிகள் இரண்டும் 99.09 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்தன. அரசுப் பள்ளிகள் 86.72 சதவீதமும், தனியார் பள்ளிகள் 94.54 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.
12ஆம் வகுப்பை பொறுத்தவரை, கடந்த ஆண்டு சுமார் 16.21 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 87.98 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 1.16 லட்சம் மாணவர்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களையும், 24,068 மாணவர்கள் 95 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களையும் பெற்றதாக சிபிஎஸ்இ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மண்டல வாரியாக பார்க்கும்போது, திருவனந்தபுரம் மண்டலம் கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பில் 99.75 சதவீதமும், 12ஆம் வகுப்பில் 99.91 சதவீதமும் பெற்று அதிக தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து விஜயவாடா மற்றும் சென்னை மண்டலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
CBSE Borad Result
தேர்வு முடிவுகள் வெளியானவுடன், மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் இடப்பெயர்வு சான்றிதழ்கள் டிஜிலாக்கர் (DigiLocker) மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும். பள்ளிகள் வழங்கும் ஆறு இலக்க அணுகல் குறியீட்டைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் டிஜிலாக்கர் கணக்குகளை அணுகலாம்.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், சிபிஎஸ்இ விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகள் வெளியானவுடன், மாணவர்கள் https://cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் மதிப்பெண்களை சரிபார்க்கலாம்.