- Home
- Business
- சோமாட்டோ, ஸ்விக்கி கட்டணம் அதிரடி உயர்வு.. வாடிக்கையாளர்கள் ஷாக்.. எவ்வளவு? என்ன காரணம்?
சோமாட்டோ, ஸ்விக்கி கட்டணம் அதிரடி உயர்வு.. வாடிக்கையாளர்கள் ஷாக்.. எவ்வளவு? என்ன காரணம்?
சோமாட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் பிளாட்பார்ம் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளன. எவ்வளவு உயர்ந்துள்ளது? என்ன காரணம்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

சோமேட்டோ, ஸ்விக்கி
இந்தியாவில் வீடு தேடி வந்து உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் பெருகி விட்டன. சோமேட்டோ, (Zomato), ஸ்விக்கி (swiggy), ஜெப்டோ (zepto) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உணவு விநியோக சந்தையில் போட்டி போட்டு வருகின்றன. இந்த ஒவ்வொரு நிறுவனமும் அதிகரித்து வரும் போட்டி நிறைந்த சந்தையில் நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்ய புதுமைகளை உருவாக்கி வருகின்றன.
பிளாட்பார்ம் கட்டண உயர்வு
இதில் சோமேட்டோ, ஸ்விக்கி முன்னிலையில் உள்ள நிலையில், இந்த இரு நிறுவனங்களும் தளக் கட்டணத்தை (Platform fee) அதிரடியாக உயர்த்தியுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது சோமேட்டோ பிளாட்பார்ம் கட்டணத்தை ஒரு ஆர்டருக்கு ₹12.50-லிருந்து ₹14.90 ஆக உயர்த்தியுள்ளது. இது 19% உயர்வாகும். ஸ்விக்கியும் தனது கட்டணத்தை ஜிஎஸ்டி (GST) உட்பட ₹14.99-லிருந்து ₹17.58 ஆக உயர்த்தியுள்ளது. இது 17% உயர்வாகும். டெலிவரி கட்டணம் போலல்லாமல், இந்த பிளாட்பார்ம் கட்டணம் நேரடியாக இந்த நிறுவனங்களின் லாபத்திற்குச் செல்கிறது.
கூடுதல் வருவாய் கொடுக்கும்
இந்த கட்டண உயர்வு சோமேட்டோவுக்கு ₹60-65 கோடியும், ஸ்விக்கிக்கு ₹40-45 கோடியும் கூடுதல் வருவாயைத் தரும். ஈரான் மோதல் காரணமாக வணிக ரீதியான எல்பிஜி (LPG) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. இது உணவகங்கள் மற்றும் டெலிவரி பார்ட்னர்களின் செலவை அதிகரித்துள்ளது. இந்தச் செலவைச் சமாளிக்க, வாடிக்கையாளர்கள் மீது சுமையை ஏற்றும் வகையில் பிளாட்பார்ம் கட்டணத்தை இரு நிறுவனங்களும் உயர்த்தியுள்ளன.
கட்டணத்தை உயர்த்தாத நிறுவனம்
அதே வேளையில் உணவு விநியோக நிறுவனமான மேஜிக்பின் தனது கட்டணத்தை உயர்த்தாமல் ₹14.20 ஆகத் தக்கவைத்துள்ளது. அதன் சிஇஓ அன்ஷூ சர்மா கூறுகையில், "உணவகப் பங்காளிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஆதரவாக இருக்க, நாங்கள் இப்போதைக்குக் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

