டெபாசிட்டா? பணம் அனுப்பனுமா? இதுதான் லிமிட்; மீறினால் வருமான வரித்துறை வீட்டுக் கதவைத் தட்டும்!!
பெரிய தொகையை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் அனுப்பும்போது வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு உள்ளது. எந்தெந்த சந்தர்ப்பங்களில் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பக்கூடும் என்று இத்தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.
Deposit in Bank Account
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் விதிகளின்படி, ஒருவர் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால், அது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கப்படும். இந்தப் பணம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தாலும் வருமான வரித்துறை கவனத்துக்குச் செல்லும். டெபாசிட் செய்த பணத்தின் ஆதாரம் குறித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பலாம்.
Fixed Deposits
ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கு மேல் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும்போது கேள்விகள் எழுவது போல, ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளில் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தாலும், வருமான வரித்துறை பணத்துக்கான ஆதாரம் கேட்டு நோட்டீஸ் அனுப்பலாம்.
Property transactions
சொத்து வாங்கும் போது ரூ.30 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்திருந்தால், சொத்து பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கண்டிப்பாக வருமான வரித்துறைக்குத் தகவல் அனுப்பப்படும். இத்தகைய சூழ்நிலையில், இவ்வளவு பெரிய பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு, எங்கிருந்து பணம் கிடைத்தது என்று கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்.
Credit card bill
கிரெடிட் கார்டு பில் ரூ. 1 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், அதுவும் அந்தத் தொகையை ரொக்கமாகச் செலுத்தினால் வருமான வரித்துறை வளையத்திற்குள் வரலாம். பணத்தின் ஆதாரம் என்ன என்று கேட்கப்படும். எந்தவொரு நிதியாண்டிலும் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் கிரெடிட் கார்டு பில் செலுத்தினால், எங்கிருந்து பணம் கிடைத்தது என்று ஐ.டி. நோட்டீஸ் வரும்.
Buying shares or bonds
பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், கடன் பத்திரங்கள் வாங்க அதிக அளவு பணத்தைப் பயன்படுத்தப்பட்டால், அதுபற்றிய தகவல் வருமானவரித் துறை சரிபார்ப்புக்குச் செல்லும். ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை செய்தால், வருமான வரித்துறை சிறப்பு கவனம் செலுத்தி விசாரிக்கிறது. பணம் எங்கிருந்து வந்தது என்று வருமான வரித்துறைக்கு விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும்.