இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.5,000, ரூ.10,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டது ஏன் தெரியுமா?
ஒரு காலத்தில் இந்தியாவில் ரூ.5,000, ரூ.10,000 போன்ற உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் இருந்தன என்பது பலரும் அறியாதது.
Rs 5000, Rs 10000 currency notes
இந்தியாவில் தற்போது ரூ.500 நோட்டுதான் அதிக மதிப்புடையது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 2016ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுதான் பயன்பாட்டிலிருந்து திரும்பப் பெறப்பட்டுவிட்டது.
ஆனால், ஒரு காலத்தில் இந்தியாவில் 2,000 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருந்துள்ளன என்பது பலரும் அறியாதது. ரூ.5,000, ரூ.10,000 போன்ற உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் இருந்தன.
இன்று பலருக்கும் தெரியாமல் இருக்கும் ரூ.5,000, ரூ.10,000 நோட்டுகளின் இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் ஒரு சுவாரஸ்யமான அத்தியாயமாக அமைந்தவை. நாடு சுதந்திரத்திம் அடைவதற்கு முன்பு 10,000 ரூபாய் நோட்டு இருந்தது. 1938ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முதல் 10,000 ரூபாய் நோட்டை வெளியிட்டது.
Rs 5000, Rs 10000, currency notes
இதுதான் இதுவரை இந்தியாவில் வெளியிடப்பட்ட மிகப் பெரிய மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு. ஆனால் 1946 ஜனவரியில் இந்த 10,000 ரூபாய் நோட்டை ரத்து செய்ய பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. இரண்டாம் உலகப் போரின்போது அதிகரித்த கருப்புப் பணப் புழக்கத்தைத் தடுப்பதற்காக நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1954ஆம் ஆண்டு ரூ.10,000, ரூ.5,000 நோட்டுகள் மீண்டும் புழக்கத்தில் விடப்பட்டன. இந்தப் பின்னணியில் ரூ.10,000 நோட்டு விவகாரம் 1978ஆம் ஆண்டு மீண்டும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. 10,000 ரூபாய் நோட்டுடன் 5,000 ரூபாய் நோட்டும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
உயர் மதிப்புள்ள இந்த நோட்டுகள் சாமானிய மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையற்றவையாக உள்ளன என்றும் வர்த்தகம் மற்றும் கருப்புப் பணப் பரிவர்த்தனைகளில் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் விளைவாக, அப்போதைய பிரதமர் மொராஜி தேசாய் தலைமையிலான மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது.
Rs 5000, Rs 10000 currency notes
பிறகு மீண்டும் ரூ.5,000, ரூ.10,000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து சில பரிசீலனைகள் நடந்தன. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை மீண்டும் கொண்டுவரலாம் என்று பரிந்துரைத்தார் என்றும் பிறகு அவரே அந்த யோசனையைக் கைவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
2016ஆம் ஆண்டு மோடி திடீரென்று அறிவித்த பணமதிப்புநீக்க நடவடிக்கையின் போது ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. அதற்குப் பதிலாக முதலில் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், 2023ஆம் ஆண்டு ரூ.2,000 நோட்டுகளும் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டது.
2,000 நோட்டுக்குப் பதிலாக புதிய 1,000 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என்று தகவல்கள் வந்தன. ஆனால், இன்றுவரை அதற்காக அதிகாரபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதனால் இப்போது இந்தியாவில் 500 ரூபாய்தான் அதிகபட்ச மதிப்புள்ள ரூபாய் நோட்டாக இருக்கிறது.