Radha Vembu: யார் இந்த ராதா வேம்பு? ரூ.21,000 கோடி சொத்துடன் இந்தியாவின் பணக்காரப் பெண்!
தமிழகத்தைச் சேர்ந்த ராதா வேம்பு தற்போது இந்தியாவின் மூன்றாவது பணக்கார பெண்மணியாக உள்ளார். சென்னை ஐஐடியில் படித்த இவர் ஜோஹோ நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.
50 வயதான ராதா வேம்பு தற்போது இந்தியாவின் மூன்றாவது பணக்கார பெண்மணியாக உள்ளார். அதே சமயத்தில் சொந்த உழைப்பால் முன்னேறியவர்கள் வரிசையில் நம்பர் ஒன் பணக்கார பெண்மணியாகவும் கருதப்படுகிறார். இதற்கு முன்பு கிரண் மஜும்தார்-ஷா மற்றும் ஃபால்குனி நாயர் போன்றவர்கள் வகித்ததைப் போன்ற இடத்தில் இருக்கிறார்.
போர்ப்ஸ் கோடீஸ்வரர்கள் பட்டியலின்படி, வேம்புவின் சொத்து மதிப்பு $2.6 கோடி. அதாவது சுமார் ரூ.21,455 கோடி. இதன் மூலம் அவர் உலகின் 1176வது பணக்காரராக உள்ளார். பன்னாட்டு நிறுவனமான ஜோஹோ கார்ப் நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பவர் ராதா வேம்பு. ஜோஹோ மென்பொருள் நிறுவனத்தை ராதா வேம்பு அவரது சகோதரர் ஶ்ரீதர் வேம்புவுடன் சேர்ந்து நிறுவினார்.
1972 இல் பிறந்த ராதா வேம்புவின் தந்தை சாம்பமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெனோகிராஃபராகப் பணிபுரிந்தார். ராதாவுடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்களும் ஒரு சகோதரியும். சென்னையின் ஐஐடி நிறுவனத்தில் தொழில்துறை நிர்வாகத்தில் பட்டம் பெற்ற ராதா வேம்பு, 1988ஆம் ஆண்டு ராஜேந்திரன் தண்டபாணி என்பவரை மணந்தார். இவர்களுக்குப் பிறந்த மகன் ஆதித்யா ராஜேந்திரன்.
1996ஆம் ஆண்டு, படித்துக்கொண்டிருக்கும்போதே, சகோதரர்கள் ஸ்ரீதர் வேம்பு மற்றும் சேகர் வேம்பு ஆகியோருடனும் பிற நபர்களுடனும் இணைந்து அட்வென்ட்நெட் என்ற நிறுவனத்தை நிறுவினார். ஶ்ரீதர் வேம்பு பலருக்கும் அறிமுகமானவர். அண்மையில் பத்மஶ்ரீ விருதும் பெற்றவர். சேகர் வேம்பு அதிக பிரபலம் அடையாதவர்.
ராதா வேம்பு ஜோஹோ மெயில் தயாரிப்பு மேலாளராக 250 பேர் கொண்ட குழுவிற்குத் தலைமை தாங்குகிறார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஆஸ்டின் நகரில் 375 ஏக்கர் பரப்பில் ஜோஹோ நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. ஜோஹோவின் முக்கிய அலுவலகங்களில் ஒன்றாக விளங்கும் சென்னை அலுலவகத்தில் ராதா வேம்பு பணிபுரிகிறார்.
ஜோஹோ உலகம் முழுவதும் ஒன்பது நாடுகளில் இயங்குகிறது. 6 கோடிக்கும் மேற்பட்டவர் ஜோஹோவின் மென்பொருள்களை பயன்படுத்துகின்றனர். கிளவுட் அடிப்படையிலான வணிக மென்பொருளுக்கு பெயர் பெற்ற ஜோஹோ, வாட்ஸ்அப் போன்ற 'அரட்டை' என்ற மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளது.
ஹைடெக் அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற விவசாய தன்னார்வ தொண்டு நிறுவனம், ஹைலேண்ட் வேலி கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநராகவும் ராதா ஜானகி செயல்படுகிறார்.