ரூ.5 லட்சம் வரை வரி இல்லையா? வருமான வரியில் அரசு செய்யப் போகும் அதிரடி மாற்றம்
யூனியன் பட்ஜெட் 2026-ல், புதிய வரி முறையின் கீழ் அடிப்படை வரி விலக்கு வரம்பு 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வரி செலுத்துவோர்
யூனியன் பட்ஜெட் 2026 குறித்து, புத்தாண்டு தொடங்கியதில் இருந்து அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1, 2026 அன்று மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். குறிப்பாக இந்த ஆண்டின் பட்ஜெட்டில், வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் முக்கிய கவனத்தை ஈர்க்கும். கடந்த ஆண்டுகளில் செய்யப்பட்ட வரி சீர்திருத்தங்கள் நேரடியாக நடுத்தர வர்க்க மக்களின் செலவு மற்றும் சேமிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
வரி விலக்கு வரம்பு
முந்தைய மத்தியடில் பட்ஜெட், அரசு பல முக்கிய வருமான வரி மாற்றங்களை நடைமுறைப்படுத்தியது. அதில், 12 லட்சம் ரூபாய் வருமானம் பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவு, லட்சக்கணக்கான வரி செலுத்துவோருக்கு உடனடி நிவாரணமாக அமைந்தது. அதனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் வரி சுமை மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.
புதிய வருமான வரிச் சட்டம்
நிபுணர்கள் கூறுவதன்படி, புதிய வரி முறையின் கீழ் அடிப்படை வரி விலக்கு வரம்பு 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி செலுத்த வேண்டிய அவசியமும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயமும் இருக்காது. இது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும்.
நடுத்தர வர்க்க வரி
மேலும், 1961 முதல் நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக, ஏப்ரல் 1, 2026 முதல் புதிய வருமான வரிச் சட்டம் 2025 அமலுக்கு வரவுள்ளது. இந்த புதிய சட்டம், வரி விகிதங்களை மாற்றுவதற்காக அல்ல; மாறாக, வரி விதிகளை எளிமைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. சிக்கலான சட்ட மொழியால் ஏற்பட்ட குழப்பங்களை நீக்கி, வரி இணக்கத்தை எளிதாக்குவதே அரசின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம், வரி செலுத்துவோர் நேரடியாக பலன்களை அனுபவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

