தக்காளி,வெங்காயம் இடையே கடும் போட்டி! ரூ.2000 கோடிக்கு விற்பனை!
தமிழ்நாட்டில் இருந்து கடந்த ஆண்டு ரூ.2,000 கோடி மதிப்புள்ள காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட 8 முக்கிய காய்கறிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. இயற்கை விவசாயம் அரசு உதவிகள் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு காய்கறி ஏற்றுமதியில் சாதனை
தமிழ்நாடு, இந்தியாவின் முக்கியமான விவசாய மண்டலங்களில் ஒன்று என்றால் அது மிகையல்ல. இங்கு பல்வேறு வகையான காய்கறிகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் காய்கறி உற்பத்தி மட்டுமின்றி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில் தமிழ்நாடு பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த வருடம் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து சுமார் 8 முக்கியமான காய்கறிகள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தக்காளியும் வெங்காயமும் அதில் முக்கிய இடத்தில் உள்ள நிலையில், அதற்கு இயற்கை விவசாயமும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
கைகொடுக்கும் தக்காளி ஏற்றுமதி
காய்கறி ஏற்றுமதியில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டில் 1,50,000 டன் தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு, கிலோக்கு ₹30 என்ற சராசரி விலையில் சுமார் ₹450 கோடி வருமானம் கிடைத்துள்ளது. அதேபோல், 1,20,000 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு ₹300 கோடி வருமானம் ஈட்டியது. பீன்ஸ் 50,000 டன் அளவில் ₹50 கிலோ விலையில் சுமார் ₹250 கோடி வருமானம் சேர்க்கப்பட்டது. கோவைக்காய், பாகற்காய், முட்டைகோசு, மிளகாய், கரட் போன்றவை மொத்தம் 1,90,000 டன் அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு ₹665 கோடி வருமானம் கொடுத்தன. தனியாக மிளகாய், 15,000 டன் அளவில், கிலோக்கு ₹100 என்ற விலையில் ₹150 கோடி வருமானம் ஈட்டியது. தரமான காய்கறிகளை உற்பத்தி செய்வதால் தமிழகத்தின் காய்கறிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் அதில் கிடைக்கும் வருமானம் முழுமையாக விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடைத்தரகர்கள் அதிக லாபம் அடைவதாகவும் அதனை தடுக்க முடியவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி
எட்டு முக்கிய காய்கறிகளின் மூலம் மட்டும் தமிழக விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு சுமார் ₹1,665 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதேபோன்று மற்ற காய்கறிகள் சேர்த்து மொத்த காய்கறி ஏற்றுமதி வருமானம் ₹2,000 கோடியைத் தாண்டியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேஷியா, கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு இவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
"தமிழ்நாடு அரசே காரணம்"
இந்த வெற்றிக்கு காரணமாக தமிழ்நாடு அரசு வழங்கும் பல்வேறு உதவிகள், நவீன தொழில்நுட்பங்கள், குளிர்சாதன வசதி, தர சான்றிதழ் மற்றும் சுதந்திரமாக ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. விவசாயிகள் தொழில்நுட்ப பயிற்சிகளைப் பெற்று உலக தரத்துக்கேற்ப காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார்கள். இதன் மூலம் தமிழ்நாட்டின் விவசாயத் துறையும் வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. வருங்காலத்தில் இன்னும் அதிக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம், தமிழக விவசாயிகளின் வருமானம் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.