- Home
- Business
- வீட்டில் தங்க நகை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு... பழைய விதியை மாற்றிய உச்ச நீதிமன்றம்; இனி இது கட்டாயம்!
வீட்டில் தங்க நகை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு... பழைய விதியை மாற்றிய உச்ச நீதிமன்றம்; இனி இது கட்டாயம்!
வீட்டில் வைத்திருக்கும் ஒவ்வொரு தங்க நகைக்கும் பில், உயில் அல்லது புகைப்பட ஆதாரம் போன்ற ஆவணச் சான்றுகள் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
வீட்டில் எவ்வளவு தங்க நகைகளைக் கணக்கில் காட்டாமல் வைத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பான விதிமுறைகளில் உச்ச நீதிமன்றம் முக்கிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. நவ.2-ம் தேதி 'பூல் பரி குமாரி' (Phool Pari Kumari) வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தங்களிடம் உள்ள தங்க நகைகளுக்கு உரிய ஆவணச் சான்றுகளை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடைமுறையில் இருந்த விதி என்ன?
வருமான வரித்துறையினரின் சோதனையின்போது, ஒருவரின் வருமானத்திற்கு அதிகமான தங்கம் வீட்டில் கண்டறியப்பட்டாலும், குறிப்பிட்ட அளவு வரையிலான தங்கத்தைப் பறிமுதல் செய்யக்கூடாது என்ற வருமான வரித்துறை வழிகாட்டுதல் நடைமுறையில் இருந்தது. அதன்படி திருமணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் 500 கிராம் தங்கம், திருமணமாகாத ஒவ்வொரு பெண்ணுக்கும் 250 கிராம் தங்கம், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு ஆணுக்கும் 100 கிராம் தங்கம் வைத்திருக்கலாம். இந்த வரம்பின் அடிப்படையில், நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் சுமார் 1 கிலோ வரை தங்கம் இருந்தால், அதனை வாங்கியதற்கான ரசீதுகளோ? ஆவணச் சான்றுகளோ இல்லாவிட்டாலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது.
உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு
இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரின் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட 700 கிராம் தங்கம் வருமான வரித்துறையின் மேற்குறிப்பிட்ட வரம்பிற்குள் தான் வருகிறது என்றும், எனவே அதற்கு ஆவணச் சான்றுகள் தேவையில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனைத் திட்டவட்டமாக நிராகரித்த உச்ச நீதிமன்றம், வருமான வரித்துறை அளித்துள்ள இந்தத் சலுகையை ஊழல் வழக்குகளில் பயன்படுத்த முடியாது எனத் தீர்ப்பளித்துள்ளது. மேலும், வீட்டில் உள்ள ஒவ்வொரு தங்க நகைக்கும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு ஆவணச் சான்று இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் என்னென்ன?
உங்களிடம் உள்ள தங்க நகைகள் முறையான வழியில் வந்தவை என்பதை நிரூபிக்க நகை வாங்கியதற்கான பில்கள் (Purchase bills) அல்லது வங்கிப் பரிவர்த்தனை அறிக்கைகள் (Bank statements), பரம்பரையாக வந்த நகையாக இருந்தால், அதற்கான தானப் பத்திரம் (Gift deed) அல்லது உயில் (Will), பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி ஆகியோர் அந்த நகைகளை அணிந்திருந்தது மற்றும் அதனை வழங்கியதற்கான புகைப்பட ஆதாரங்கள் (Photographs) ஆகிய ஏதேனும் ஒரு சான்றை வைத்திருக்க வேண்டும்.
ஆவணங்கள் இல்லாவிட்டால் என்னவாகும்?
தங்க நகைகளுக்கு உரிய ஆவணச் சான்றுகள் இல்லாத பட்சத்தில், வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்காவிட்டாலும் கூட, ஊழல் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Corruption Act) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் அந்தத் தங்கம் மற்றும் பணம் முழுவதையும் உச்ச நீதிமன்றம் பறிமுதல் செய்யும். அத்துடன், இது ஒரு கிரிமினல் குற்றமாகவும் (Criminal offense) கருதப்படும். எனவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள அனைத்து நகைகளுக்கும் உரிய ஆவணங்களைச் சரிபார்த்துப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியமாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.











