கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்கு மதிப்பு கூடணுமா? இந்த ஐடியா ட்ரை பண்ணி பாருங்க!
சொத்தின் உரிமையாளர் சில விஷயங்களைச் செய்து தங்கள் சொத்தைப் பராமரிப்பதன் மூலம் அதன் மதிப்பை உயர்த்தலாம். இதன் மூலம் பிற்காலத்தில் சொத்தை விற்க விரும்பினால், அதிக சிரமமின்றி விரும்பிய விலையைப் பெறமுடியும்.
பலர் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்கிறார்கள். எதிர்காலத்தில் தங்கள் சொத்தை விற்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் முதலீடு செய்பவர்களும் உள்ளனர். தேவைப்படும்போது ஒரு பெரிய தொகையை விரைவாக ஈட்ட இந்த முதலீடு பயன்படுகிறது. அவை குழந்தைகளின் திருமணம், கல்வி, மருத்துவம் போன்ற செலவுகளுக்காக இருக்கலாம்.
ஒரு சொத்தை விற்பனை செய்பவர் தான் கேட்கும் விலை கிடைக்க வேண்டும் என்று விரும்பவார்கள். ஆனால், வாங்குபவர் அதைவிடக் குறைவான விலைக்கு பேரம் பேசுவார். இது தொடர்பாக விரிவாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும். சொத்தின் உரிமையாளர் சில விஷயங்களைச் செய்து தங்கள் சொத்தைப் பராமரிப்பதன் மூலம் அதன் மதிப்பை உயர்த்தலாம். இதன் மூலம் பிற்காலத்தில் சொத்தை விற்க விரும்பினால், அதிக சிரமமின்றி விரும்பிய விலையைப் பெறமுடியும்.
பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல்
ஒரு சொத்திற்கு நீங்கள் விரும்பிய விலையைப் பெறுவதற்கான சிறந்த வழி விற்கும்வரை அதைத் தொடர்ந்து பராமரிப்பது. விற்பனைக்கு முன் உள் மற்றும் வெளிப்புற சுவர்களில் மீண்டும் வண்ணம் பூசுங்கள். பிளாஸ்டர், டைல்ஸ் அல்லது தரையமைப்பில் சேதம் இருந்தால் அவற்றைப் பழுதுபார்க்கலாம்.
பால்கனியில் ஒரு தோட்டம் இருந்தால் அதை அழகுபடுத்துவதில் கவனம் செலுத்துங்கள். சமையலறை மற்றும் குளியலறையையும் புதுப்பிக்கலாம். நவீன சமையலறைகள் மற்றும் குளியலறைகள் இருப்பது சொத்தின் மதிப்பை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க காரணிகளாக உள்ளன.
சோலார் பேனல்
உங்கள் சொத்து மேல் தளத்தில் இருந்தால், பெரிய வளாகம் ஒன்றின் ஒரு பகுதியாக இருந்தால், கூரையில் சோலார் பேனல்களை நிறுவலாம். வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தைவிட, சோலார் மின்சாரம் மிகவும் மலிவானது. சோலார் பேனல்களை நிறுவ, அரசுத் திட்டங்கள் மூலம் மானியமும் பெறலாம்.
வீட்டை வாங்குபவர்கள் சோலார் பவர் உள்ள வீட்டை வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றால், அவற்றைக் கழற்றி வேறு இடத்தில்கூட பயன்படுத்தலாம்.
மாறுதல்கள்
முடிந்தால், கூடுதல் அறைகளைச் சேர்ப்பதன் மூலமோ அல்லது ஒரு அறையை வீட்டு அலுவலகமாக மாற்றுவதன் மூலமோ சொத்தின் மதிப்பை அதிகரிக்கலாம். COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு, மக்கள் எந்த இடையூறும் இல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய வசதியை எதிர்பார்க்கிறார்கள்.
கேரேஜ் அல்லது வாகன நிறுத்துமிடம் இருந்தால், அதை சுத்தமாகப் பராமரிப்பதை உறுதிப்படுத்தவும். வீடு முழுவதும் சரியான வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்து, தண்ணீர் குழாய்கள் எதுவும் ஒழுகாமல் இருக்கிறதா என்று சரிபார்க்கவும். அனைத்து சுவிட்சுகள், மின்விசிறிகள் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதையும் உறுதி செய்யவும். இவற்றில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால் அதற்காக சிறிய செலவு செய்யத் தயங்க வேண்டாம்.
பாதுகாப்பு அம்சங்கள்
சொத்துகளை வாங்கும் அனைவருக்கும் பாதுகாப்பு முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். எனவே சொத்து எவ்வளவு பாதுகாப்பானது என்பதை அறிய விரும்புவார்கள். எனவே, உங்கள் சொத்தில் குற்றப் பின்னணி, அல்லது உரிமை சார்ந்த சிக்கல்கள் ஏதும் இல்லை என்பதை நிரூபிப்பது அவசியம்.
அந்தக் காலத்தில் நவீன பாதுகாப்பு அமைப்புகள் இருப்பதும் அவசியம். சிசிடிவி கேமராக்கள் வீட்டையும் அக்கம்பக்கத்து நடமாட்டங்களையும் கண்காணிக்கப் பயன்படுகின்றன. யாராவது உள்ளே நுழைய முயன்றால் உங்களுக்கும் உங்கள் அண்டை வீட்டாருக்கும் அலாரம் மூலம் தகவல் தெரிவிக்கும் வாய்ப்பும் உள்ளது. பிரதான வாசலில் ஸ்மார்ட் பூட்டுகள், பயோமெட்ரிக் அடையாளம் மூலம் திறக்கும் வசதி போன்றவை இருப்பது வீட்டின் மதிப்பை மேலும் கவர்ச்சிகரமாக மாற்றும்.
நியாயமான விலை
விரைவான விற்பனைக்கு சரியான விலையை நிர்ணயிப்பது மிக முக்கியம். நீங்கள் நியாயமான விலையைக் கேட்டால், விற்பனை சுலபமாக முடியும் வாய்ப்பு அதிகம். உங்களுக்கு தெரிந்தவர்களிடம் விசாரிக்கலாம். அல்லது நீங்களே அந்தப் பகுதியில் உள்ள சொத்துகளைப் பார்வையிடலாம். சில டீலர்களிடம் பேசிய பிறகு, அப்பகுதியில் சொத்துகளின் சராசரி விலையைப் பற்றி ஐடியா கிடைக்கும்.
உங்கள் சொத்துக்கான பொருத்தமான விலையை முடிவுசெய்ய அனுபவம் வாய்ந்த ரியல் எஸ்டேட் முகவர் ஒருவரின் உதவியையும் நாடலாம். சொத்தை விற்கவும் அவர்களின் உதவி தேவைப்படலாம்.