இந்தியாவின் சிக்கன், முட்டைகளுக்கு தடை விதித்த நாடு.. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
சவுதி அரேபியா இந்தியா உள்பட 40 நாடுகளின் சிக்கன், முட்டைகளுக்கு தடை விதித்துள்ளது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்திய சிக்கன், முட்டைகளுக்கு தடை
மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா, இந்தியா உட்பட உலகின் 40 நாடுகளில் இருந்து சிக்கன் மற்றும் முட்டை இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் (SFDA) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. முக்கியமாக பறவைக் காய்ச்சல் (Bird Flu - Avian Influenza) மற்றும் நியூகாசில் நோய் (Newcastle disease virus) பரவுவதைத் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் பாதுகாப்பே முக்கியம்
நாட்டின் சந்தையில் உணவுப் பாதுகாப்புத் தரங்களை வலுப்படுத்தவும், மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ஏற்றுமதித் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்தியா மட்டுமின்றி 40 நாடுகளுக்கும் தடை
இந்தியா மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, இந்தோனேசியா, ஈரான், வங்கதேசம், தைவான், தென்னாப்பிரிக்கா, சீனா, ஈராக், வியட்நாம், கம்போடியா, தென் கொரியா, வட கொரியா, ஐக்கிய ராஜ்ஜியம், எகிப்து, மெக்சிகோ, ஜப்பான் மற்றும் ஹாங்காங் உட்பட மொத்தம் 40 நாடுகள் மீது முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய சுகாதார நிலைமைக்கு ஏற்ப இந்தப் பட்டியல் அவ்வப்போது திருத்தப்படும் என்று SFDA கூறியுள்ளது. மேலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் கனடா உட்பட 16 நாடுகள் மீது பகுதி (Partial) கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்திய பொருளாதாரத்தில் தாக்கம்
கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவின் கோழி ஏற்றுமதி சுமார் $149 மில்லியனாக (சுமார் ₹1,288 கோடி) உயர்ந்திருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்கு அதிகமாகும். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் இந்திய முட்டைகளுக்கு பெரும் தேவை உள்ளது. ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளர் நாடுகளாக உள்ளன, இப்போது சவுதியின் இந்தத் தடை இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்.
நிபந்தனைகள் என்னென்ன?
சவுதி அரேபிய அரசாங்க உத்தரவின்படி சிக்கன் அல்லது அது தொடர்பான பொருட்களை வைரஸ் இல்லாததாக மாற்றுவதற்கு சரியான வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்டிருந்தால் அத்தகைய பொருட்களுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம். ஆனால், இந்தப் பொருட்கள் அதிகாரப்பூர்வ சுகாதார அமைப்பால் சான்றளிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சாலைகளில் இருந்து வந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.