கிடுக்கிப்பிடி போடும் ரிசரவ் வங்கி விதிகள்! மீறினால் 10 லட்சம் அபராதம்!!
RBI new rules: இந்திய ரிசர்வ் வங்கி (RBI), பேமெண்ட்ஸ் மற்றும் செட்டில்மெண்ட் சிஸ்டம்ஸ் சட்டம் 2007 இன் கீழ், கட்டண முறை விதிமீறல்களுக்கான அபராத விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. விதிமீறல்களுக்கான அபராதம் விதிமீறல் தொகையின் இரு மடங்கு அல்லது ரூ.10 லட்சம் வரை இருக்கும், மேலும் தொடர்ச்சியான விதிமீறல்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.

RBI new rules
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பேமெண்ட்ஸ் மற்றும் செட்டில்மெண்ட் சிஸ்டம்ஸ் சட்டம் 2007 இன் கீழ் வீதிமீறல்களுக்கான அபராதங்கள் மற்றும் விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளது.
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ், அங்கீகாரம் இல்லாமல் கட்டண முறையை இயக்குதல், தேவையான தகவல்களை வழங்கத் தவறுதல், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது, KYC மற்றும் பணமோசடி தடுப்பு (AML) விதிமுறைகளை மீறுதல் போன்ற குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.
விதிமீறலில் ஈடுபட்ட தொகையின் இரு மடங்கு அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இதில் எது அதிகமோ அதை அபராதமாக வசூலிக்க ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உண்டு. விதிமீறல் தொடர்ந்து நடக்கும் பட்சத்தில், முதல் நாளுக்குப் பிறகு ஒவ்வொரு நாளுக்கும் ரூ.25,000/- வரை அபராதம் விதிக்கப்படலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி தண்டனை விதிப்பதற்கான நடைமுறைகளையும் விவரித்துள்ளது. ரிசரவ் வங்கியில் இருந்து விதிமீறல் தொடர்பாக விளக்கம் கேட்கும் நோட்டீஸ்கள் அனுப்பப்படலாம், தனிப்பட்ட விசாரணைக்கும் அழைக்கப்படலாம். இந்த நடைமுறை குற்றவியல் நடவடிக்கைகள் இல்லாமல் விதிமீறலுக்குத் தீர்வு காண அனுமதிக்கிறது.
காம்பவுண்டிங் கோரும் நிறுவனங்கள் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். காம்பவுண்டிங் அபராதத்தை விட 25% குறைவாக இருக்கலாம். அது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் அபராதம் அல்லது காம்பவுண்டிங் தொகையைச் செலுத்தத் தவறினால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளில் அபராதங்கள் குறித்த தகவலை வெளியிட வேண்டும் என்றும், அமலாக்க நடவடிக்கைகளின் விவரங்கள் ரிசரவ் வங்கியின் வலைத்தளத்தில் வெளியிடப்படும் என்றும் ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. இந்தத் திருத்தப்பட்ட விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் வாலட், ப்ரீபெய்ட் பேமெண்ட் கருவிகள் மற்றும் UPI போன்ற பணப் பரிவர்த்தனை முறைகள் வளர்ந்து வரும் நிலையில், பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுவதில் ஆர்பிஐ கவனம் செலுத்துகிறது.