- Home
- Business
- Home Loan: சொந்த வீடு கட்டணுமா? 4% வட்டி மானியத்துடன் ரூ.25 லட்சம் கடன் பெறுவது எப்படி? முழு விவரம்!
Home Loan: சொந்த வீடு கட்டணுமா? 4% வட்டி மானியத்துடன் ரூ.25 லட்சம் கடன் பெறுவது எப்படி? முழு விவரம்!
Home Loan: சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற உங்கள் கனவு நனவாகப் போகிறது. மத்திய அரசு திட்டத்தில் 4% வட்டி மானியத்துடன் ரூ.25 லட்சம் வரை வீட்டுக் கடன் பெற்று சொந்த வீடு வாங்கும் கனவை நனவாக்கலாம். இந்த திட்டம் தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா - நகர்ப்புற 2.0 திட்டம்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது வாழ்நாள் லட்சியமாகும். ஆனால், இன்றைய விலைவாசி உயர்வில் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களால் சொந்த வீடு வாங்குவது என்பது பெரும் சவாலான விஷயமாகவே உள்ளது. பொதுமக்களின் இந்த சிரமத்தை போக்கும் வகையில், மத்திய அரசு 'பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா - நகர்ப்புற 2.0' (PMAY-U 2.0) திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் மூலம் சொந்த வீடு வாங்குவதற்கான நிதி உதவிகள் தாராளமாக வழங்கப்படுகின்றன.
திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன?
நகர்ப்புறப் பகுதிகளில் வசிக்கும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா - நகர்ப்புற 2.0 திட்டம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதன் மூலம் அதிகபட்சமாக ரூ.35 லட்சம் மதிப்புள்ள வீட்டிற்கு, ரூ.25 லட்சம் வரை வீட்டுக் கடன் பெற்றுக்கொள்ளலாம். முதல் ரூ.8 லட்சம் வரையிலான கடனுக்கு 4% வட்டி மானியம் நேரடியாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு மொத்தமாக ரூ.1.80 லட்சம் வரை மானியம் தவணை முறையில் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
யார் யார் தகுதி பெறுவார்கள்?
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளர்களின் ஆண்டு வருமானம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
EWS (பொருளாதாரத்தில் நலிந்தவர்கள்): ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை உள்ளவர்கள்.
LIG (குறைந்த வருமானப் பிரிவினர்): ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை உள்ளவர்கள்.
MIG (மத்திய வருமானப் பிரிவினர்): ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை உள்ளவர்கள்.
பயன் பெறும் 4 வழிகள் என்னென்ன?
பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப கீழ்க்கண்ட நான்கு வழிகளில் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற முடியும்:
சொந்த நிலத்தில் தாங்களே புதிதாக வீடு கட்டுதல்
கூட்டு முயற்சி அல்லது அரசாங்கத்தின் மூலமாகக்கட்டப்படும் மலிவு விலை வீடுகளை வாங்குவது
மலிவு விலை வீட்டு வாடகை வசதிகள்
வங்கிகள் மூலம் பெறப்படும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியம்
இதுவரை நாடு முழுவதும் கோடிக்கணக்கான வீடுகள் இந்தத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்தத் திட்டத்திற்கு ஆன்லைன் மூலமாக மிக எளிதாக விண்ணப்பிக்கலாம்:
அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான pmay-urban.gov.in தளத்திற்குச் செல்லவும்.
உங்கள் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்ணைக் குறிப்பிட்டு லாகின் செய்யவும்.
உங்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம், எந்தப் பிரிவின் கீழ் வருகிறீர்கள் மற்றும் வங்கி விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யவும்.
பின்னர் தேவையான வருமானச் சான்று மற்றும் அடையாள அட்டை ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நீங்கள் வங்கிகள் வழியாக கடன் பெறத் திட்டமிட்டால், விண்ணப்பிக்கும் போதே பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மானியம் கோரி விண்ணப்பிக்கப் போவதாக வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்து நடைமுறைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். சொந்த வீடு கனவை நனவாக்க இதுவே சரியான தருணம். தகுதியுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து இந்தத் திட்டத்தின் பலனை பெற்றுக்கொள்ளுங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

