பிஎம் கிசான்: 21வது தவணை எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்?
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 20 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 21வது தவணைக்கான எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், தகுதியுடையவர்கள் யார், யாருக்கெல்லாம் கிடைக்காது, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்கள் இங்கே.

பிஎம் கிசான் 21வது தவணை
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா கீழ் இதுவரை 20 தவணைகள் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி மூன்று சம தவணைகளாக வழங்கப்படுவது இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம். கடந்த மாதம் மட்டும், பிரதமர் மோடி தலைமையில் 20வது தவணையாக ரூ.20,500 கோடி, 9.7 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டது. இப்போது அனைவரும் 21வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பிஎம் கிசான் யோஜனா என்றால் என்ன?
இந்தத் திட்டம் பிப்ரவரி 24, 2019 அன்று மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயக் குடும்பங்களுக்கு நேரடி நிதியுதவி வழங்கி, அவர்கள் நிம்மதியாக வாழ்க்கையை நடத்த உதவுவதே இதன் நோக்கம். தகுதியான விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6,000 வழங்கப்படும். இது மூன்று தவணைகளாக வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
21வது தவணை யாருக்குக் கிடைக்கும்?
சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கே இத்திட்டத்தின் பலன் கிடைக்கும். நிலம் விவசாயியின் பெயரில் பிப்ரவரி 1, 2019க்குள் பதிவு செய்யப்பட வேண்டும். அதோடு, விவசாயியின் வங்கிக் கணக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டு, NPCIயுடன் சரியாக செயல்பட வேண்டும்.
21வது தவணை யாருக்குக் கிடைக்காது?
சொந்தமாக நிலம் இல்லாதவர்கள், குடும்பத்தில் ஏற்கனவே ஒருவர் திட்ட நன்மை பெற்றிருந்தால், 18 வயதுக்கு குறைவானவர்கள், அரசு நில உரிமையாளர்கள், NRI களுக்கு இந்த தவணை கிடையாது. அதேபோல், அரசு/அரசு சார்ந்த நிறுவன ஊழியர்கள், அதிக ஓய்வூதியம் பெறுவோர், கடந்த ஆண்டு வருமான வரி செலுத்தியவர்கள், மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர், CA போன்ற தொழிலில் ஈடுபட்டவர்களும் இதில் சேர முடியாது.
விவசாயி நிதியுதவி திட்டம்
தகுதியானவர்கள் [pmkisan.gov.in](http://pmkisan.gov.in) இணையதளத்தில் சென்று, "விவசாயிகள் பகுதி" மூலம் பதிவு செய்யலாம். தேவையான ஆவணங்களையும், வங்கிக் கணக்கையும் இணைத்தால், திட்டத்தின் கீழ் தவணைகள் தானாகவே அவர்களின் கணக்கில் சேரும்.