- Home
- Business
- கார் வாங்கப்போகிறீர்களா.? இதை தெரிஞ்சிக்காம வாங்காதீங்க.! இல்லாட்டி பட்ஜெட் கையை கடிக்கும்.!
கார் வாங்கப்போகிறீர்களா.? இதை தெரிஞ்சிக்காம வாங்காதீங்க.! இல்லாட்டி பட்ஜெட் கையை கடிக்கும்.!
கார் வாங்குவது என்பது தொடர் செலவுகளை உள்ளடக்கியது. சம்பளம், சேமிப்பு, இஎம்ஐ போன்றவற்றை கணக்கிட்டு வாங்கினால் நிதி பாதிப்பை தவிர்க்கலாம்.

கார் எனும் சந்தோஷம்
சொந்த வீடாக இருந்தாலும், சொந்த காராக இருந்தாலும் அதனை வாங்கம் போது இருக்கும் சந்தோஷம் இஎம்ஐ கட்டும் போது காணாமல் போகிறது. இதனால் வீடாக இருந்தாலும் காராக இருந்தாலும் நமது சம்பளம், சேமிப்பு மற்றும் மாதம் எவ்வளவு இஎம்ஐ கட்ட முடியும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு வாங்கினால் நமக்கு அது நிதி சார்ந்த எந்த பாதிப்பையும் கொடுக்காது. கார் வாங்குவது என்பது ஒரே ஒரு நாள் செய்யப்படும் செலவு அல்ல. அது தொடர்ந்து நமது வருமானத்தை பாதிக்கும் பல செலவுகளும் அதோடு வரும். எனவே, கார் வாங்கும் முன் நிதி சார்ந்த சில முக்கிய விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.
மாதத்தவணை மட்டும் போதாது!
காரின் விலையை மட்டும் பார்க்காமல், மாதா மாதம் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ-யையும், அதன் வட்டியையும் கணக்கிட்டு அதை நாம் ஒவ்வொரு மாதமும் சரியாக செலுத்த முடியுமா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். மாத வருமானத்தில் குறைந்தது 20 சதவீத தொகையை சேமிப்பாக இருக்கும்போது மட்டுமே EMI மூலம் கார் வாங்குவது சிறந்த தேர்வாக இருக்கும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நீங்கள் உங்களது சம்பளத்தில் 20 சதவீதத்தை மாதா மாதம் சேமிக்க முடியாவிட்டால் கார் வாங்குவதை தள்ளிப்போடுவது நல்லது.
காப்பீடு கட்டாயம்
கார் வாங்குவோர் காப்பீட்டுக்கு ஒரு தொகையை ஆண்டுதோறும் செலவு செய்ய வேண்டும். இது முக்கியமான செலவு என்றாலும் அதனை ஆண்டுதோறும் செய்ய வேண்டியது கட்டாயமாகும். ஆண்டுதோறும் இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டவேண்டும் என்பதால் 1500 சிசி கார்கள் என்றால் ₹10,000-₹15,000 வரை செலவாகலாம். இது தவிர்க்க முடியாத செலவாகும்.
பெட்ரோல் டீசல் செலவு
எப்போதும் காரில் செல்லும் சந்தோஷத்தை குறைக்கும் ஆற்றல் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு உண்டு. மாதா மாதம் பெட்ரோல் டீசலுக்கு செலவு செய்யும் போது நமது மாத பட்ஜெட்டில் கூடுதல் செலவு சேரும் என்பதால் அதனை கணக்கிட்டு கார் வாங்கினால் நல்லது. சராசரியாக மாதம் 1,000 கிலோ மீட்டர் ஓட்டினால், பெட்ரோல் விலை அடிப்படையில் ₹10,000 வரை பெட்ரோல்/டீசல் செலவாகும். இதனை கணக்கிட்டு பெட்ரோல் டீசல் செலவை சமாளிக்கும் சம்பளம் இருந்தால் மட்டுமே கார் வாங்க வேண்டும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.
பிரமிப்பை ஏற்படுத்தும் பராமரிப்பு செலவுகள்
காருக்கு இஎம்ஐ கட்டுவதை விட அதன் பராமரிப்பு செலவு உங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் என்றால் அது மிகையல்ல. ஆண்டுக்கு குறைந்தபட்சம் ₹15,000 - ₹25,000 வரை பராமரிப்புச் செலவுகள் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். டயர்கள், உதிரி பாகங்கள் ஆகியவை காலம் கடந்தால் மாற்ற வேண்டியதாயிருக்கும். இதனை கார் வாங்கும் முன்பே தெரிந்துகொண்டால் கார் வங்க வேண்டுமா வேண்டாமா என்ற முடிவை சரியாக எடுக்கலாம்.
கூடுதல் செலவுகள்
பராமரிப்பு, பெட்ரோல் செலவை விட பார்க்கிங், டோல் உள்ளிட்ட செலவுகள் நிச்சயமாக இஎம்ஐ தொகையில் நான்கில் ஒரு பங்கு வந்துவிடும் என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம். பார்க்கிங் மற்றும் டோல் செலவிற்கு மட்டுமே மாதத்திற்கு ₹2,000 வரை கூடுதல் செலவு ஆக வாய்ப்புகள் உண்டு.
வாரம் ஒருமுறைதான் ஓட்டப்போகிறீர்களா.?
தினமும் கரை பயன்படுத்த போகிறீர்களா? அல்லது எப்போதாவது ஊருக்கு செல்வதற்கு மட்டுமே பயன்படுத்த போகிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டால் கார் வாங்குவது குறித்து முடிவு எடுக்கலாம். தினமும் காரை பயன்படுத்தவில்லை எனில் ஓலா/ஊபர் அல்லது வாடகை கார்களை பயன்படுத்தலாம். அப்படி செய்தால் பராமரிப்பு பிரச்சினைகள், இன்ஷூரன்ஸ், வட்டி ஆகியவை உங்களை பாதிக்காது.
பழைய கார்கள்?
புதிய கார்களுக்கு பதிலாக நல்ல நிலையில் உள்ள பழைய கார்கள் 50-60% தள்ளுபடியில் கிடைக்கலாம். ஆனால் அதில் பராமரிப்பு செலவு அதிகமாக இருந்தாலும் மறுவிற்பனை மதிப்பு குறைவாக இருக்கும். யூஸ்டு கார்கள் வாங்கும் போது இஎம்ஐ குறையும், முதலீடும் கம்மியாகும் என்பதால் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கி நிதி செலவை குறையலாம்.
எப்போது யார் கார் வாங்கலாம்.?
- கார் EMI தொகையின் இரண்டு மடங்கு அளவு கையில் இருப்பவர்கள்தான் வாங்க வேண்டும்
- வாரம் ஒருமுறை பயணிக்கவிருப்பவர்களுக்கு வாடகை வண்டிகள் சிறந்த தேர்வு
- கௌரவத்துக்காக கார் வாங்க வேண்டாம்
- கார் வாங்கிய பிறகு கடன் அட்டையால் செலவு செய்து சிக்கலில் விழக்கூடாது
கார் வாங்கும் முன்.!
நிச்சயமாக கார் என்பது வசதிக்கும், விருப்பத்துக்கும் ஒரு முக்கியமான சொத்தாக இருக்கலாம். ஆனால், உங்கள் வருமானத்தில் குறைந்தபட்சம் 20 சதவீதம் சேமிப்பு இருக்கும் போது, மற்றும் வாரத்திற்கு பலமுறை பயணம் செய்ய வேண்டிய தேவையுடன் இருந்தால் மட்டுமே கார் வாங்குவது உங்களது நிதிநிலையை பாதிக்காமல் இருக்கும்.இல்லையெனில், வாடகை கார்களே சரியான தீர்வு என்கின்றனர் பொருளாதார ஆலோசகர்கள்!