- Home
- Business
- Post Office : இனி இது கட்டாயம்.. தபால் அலுவலகத்தில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!
Post Office : இனி இது கட்டாயம்.. தபால் அலுவலகத்தில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!
Post Office Customers Alert : தபால் நிலைய சேமிப்பு மற்றும் முதலீட்டு கணக்குகளுக்கு இனி குறிப்பிட்ட ஒரு விஷயம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பணம் செலுத்துதல், பணம் எடுப்பது, புதிய கணக்கு திறப்பது உள்ளிட்ட பல சேவைகளுக்கு புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

தபால் நிலைய புதிய விதி
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களை நம்பி பணம் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பான சேமிப்பு வாய்ப்பாக கருதப்படும் அஞ்சல் அலுவலக திட்டங்களில் தற்போது புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. குறிப்பாக பான் கார்டு தொடர்பான விதிகள் கடுமையாக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டிய நிலை உள்ளது.
பான் இல்லாமல் பரிவர்த்தனை சிரமம்
வருமான வரி விதிகள் 2026ன் படி, தபால் நிலையங்களில் நடைபெறும் பல முக்கிய பரிவர்த்தனைகளுக்கு பான் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கணக்கு தொடங்குதல், பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுப்பது, நேர வைப்பு உள்ளிட்ட முதலீடுகள் செய்வது போன்ற பணிகளுக்கு பான் விவரம் வழங்க வேண்டியிருக்கும். இதன் மூலம் வங்கிகளைப் போல தபால் நிலையங்களிலும் கடுமையான கண்காணிப்பு நடைமுறைக்கு வருகிறது.
அரசின் நோக்கம் என்ன?
சிறிய சேமிப்புகள் மற்றும் பரிவர்த்தனைகளையும் வரித்துறையின் கண்காணிப்புக்குள் கொண்டு வருவதே அரசின் முக்கிய நோக்கமாக இருந்தது. குறிப்பாக சந்தேகத்திற்கிடமான அல்லது அதிக அளவிலான பண பரிவர்த்தனைகளை எளிதாக கண்காணிக்க இந்த மாற்றம் உதவும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் நிதி பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.
பான் இல்லாதவர்களுக்கு என்ன நடைமுறை?
பான் கார்டு இல்லாதவர்களின் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்படாது. ஆனால் அவர்கள் கூடுதல் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக படிவம் 97 என்ற புதிய படிவத்தை பூர்த்தி செய்து அடையாளம், முகவரி மற்றும் பரிவர்த்தனை விவரங்களை வழங்க வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும் தபால் நிலைய பதிவுகளில் சேமித்து வைக்கப்படும்.
TDS விதிகளிலும் மாற்றம்
வட்டி வருமானத்தில் TDS பிடித்தம் தவிர்க்கப்பட்ட 15G மற்றும் 15H படிவங்களுக்கு பதிலாக தற்போது படிவம் 121 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படிவம் அனைவருக்கும் பொதுவாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். வரி வரம்புக்குள் வராதவர்களுக்கே இதன் பலன் கிடைக்கும்.
7 ஆண்டுகள் பதிவுகள் பாதுகாப்பு
புதிய விதிப்படி தபால் நிலையங்கள் அனைத்து ஆவணங்களையும் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வரை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் ஏதேனும் விசாரணை அல்லது சரிபார்ப்பு தேவையானால் பரிவர்த்தனை விவரங்களை உடனடியாக பெற இந்த நடைமுறை உதவும்.
வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டியது
உடனடியாக வாடிக்கையாளர்கள் தங்களின் பான் விவரங்களைப் புதுப்பித்து வைத்திருக்க வேண்டும். மேலும் புதிய படிவம் 97 மற்றும் படிவம் 121 போன்ற விதிமுறைகள் குறித்து தெளிவாக அறிந்திருப்பது அவசியம். இல்லையெனில் எதிர்காலத்தில் பரிவர்த்தனைகளில் தாமதம் அல்லது சிக்கல்கள் ஏற்படும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

