- Home
- Business
- New Diesel Rules: இனி இவங்களுக்கு பெட்ரோல் பங்க்கில் டீசல் கிடையாது! மத்திய அரசு கட்டுப்பாடு!
New Diesel Rules: இனி இவங்களுக்கு பெட்ரோல் பங்க்கில் டீசல் கிடையாது! மத்திய அரசு கட்டுப்பாடு!
New Diesel Rules: உலக அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல் பங்குகளில் டீசல் வாங்க மத்திய அரசு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

பெட்ரோல் பங்குகளில் டீசல் வாங்க கட்டுப்பாடு
இனிமேல் தொழிற்சாலைகள், பெரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பேருந்துகள், லாரிகள் போன்ற மொத்தமாக எரிபொருள் வாங்கும் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்குகளில் டீசல் வாங்க முடியாது. மத்திய அரசு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சாதாரண மக்களுக்காக பெட்ரோல் பங்குகளில் விற்கப்படும் டீசலை, இந்த நிறுவனங்கள் மொத்தமாக வாங்கிச் செல்வதால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை ஏன்?
இது தொடர்பாக ஜூன் 11-ம் தேதியான நேற்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "மொத்த விற்பனை விலையை விட, பெட்ரோல் பங்குகளில் விற்கப்படும் டீசல் விலை குறைவாக இருப்பதால், பல தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பங்குகளை நோக்கி படையெடுக்கின்றன. இதனால், நாட்டின் சில பகுதிகளில் டீசல் விற்பனை அசாதாரணமாக அதிகரித்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமை, "சாதாரண வாடிக்கையாளர்களுக்காக ஒதுக்கப்படும் டீசல், வேறு பாதைக்குத் திருப்பப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளில் பாதிப்பு ஏற்படவும், உள்ளூர் அளவில் தட்டுப்பாடு உண்டாகவும் வாய்ப்புள்ளது" என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்
இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ், 'Motor Spirit and High Speed Diesel (Temporary Regulation of Supply through Retail Outlets) Order, 2026' என்ற புதிய உத்தரவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த உத்தரவின்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் விற்பனையாளர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு பெட்ரோல் பங்குகளில் டீசல் விற்பதை நிறுத்தும்படி அரசு அறிவுறுத்தலாம். இந்த மொத்த வாடிக்கையாளர்கள், தங்களுக்குத் தேவையான எரிபொருளை தங்களது சொந்த 'கன்ஸ்யூமர் பம்ப்கள்' மூலமாகவே பெற்றுக்கொள்ள வேண்டும்.
பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
மேலும், பெட்ரோல் பங்க் டீலர்களுக்கும் சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன:
"பெட்ரோல் பங்க் டீலர்கள், வாகனங்களின் எரிபொருள் டேங்கில் அல்லது PESO (பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு) அங்கீகரித்த கேன்களில் மட்டுமே டீசலை நிரப்ப வேண்டும். ஒரு வாடிக்கையாளருக்கு அல்லது ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு 200 லிட்டருக்கு மேல் விற்கக் கூடாது. இப்படி விற்கப்படும் டீசலை மறுவிற்பனை செய்யவும் கூடாது" என அந்த அறிவிப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
"பங்குகளில் இப்படி மொத்தமாக டீசல் வாங்குவது, பதுக்கலுக்கும், முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும். உண்மையான சில்லறை வாடிக்கையாளர்களுக்கு டீசல் கிடைப்பதில் சிக்கலை உருவாக்கும்" என அரசு இந்த நடவடிக்கைக்குக் காரணம் கூறியுள்ளது. உலக அளவில் சில பகுதிகளில் நிலவும் பதட்டமான சூழல், சர்வதேச பெட்ரோலிய விநியோகச் சங்கிலி மற்றும் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதும் இந்த முடிவுக்கு ஒரு காரணம் என அரசு தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள், முதற்கட்டமாக 90 நாட்களுக்கு அமலில் இருக்கும். அதற்கு முன்பே திரும்பப் பெறப்படலாம் அல்லது தேவைப்பட்டால் நீட்டிக்கப்படலாம். இந்த உத்தரவின் விதிகளை மீறுவோர் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

