ரயில் பயணிகள் கவனத்துக்கு.. மார்ச் 1 முதல் அதிரடி மாற்றம்.. மறக்காம நோட் பண்ணிக்கோங்க!
Indian Railways Update: இந்திய ரயில்வேயில் மார்ச் 1ம் தேதி முதல் அதிரடி மாற்றம் நிகழ உள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்திய ரயில்வே
இந்திய போக்குவரத்தில் முதுகெலும்பாக இருக்கும் ரயிலில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வது ஒருபக்கம் இருக்க, அன்றாடம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வேலைக்கு செல்பவர்கள், திடீர் பயணம் மேற்கொள்பவர்கள் முன்பதில்லாத டிக்கெட் Unreserved Ticket எடுத்து பயணம் செய்கின்றனர்.
மார்ச் 1 முதல் UTS செயலி செயல்படாது
ரயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர்களில் முன்பதில்லாத டிக்கெட் எடுப்பது மட்டுமின்றி, கவுண்ட்டருக்கே நேரடியாக செல்லாமல் செல்போன்கள் மூலம் ரயில்வேயின் Unreserved Ticketing system எனப்படும் UTS ஆப் மூலமாகவும் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்கும் வசதி இருந்து வந்தது. ஆனால் மார்ச் 1ம் தேதி முதல் UTS செயலி செயல்படாது என்று ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இனி Rail One தான் ராஜா
இது தொடர்பாக தெற்கு ரயில்வே எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''1.03.2026 முதல் மொபைலில் UTS சேவை நிறுத்தப்படும். உங்கள் தினசரி டிக்கெட் தேவைகளுக்கு RailOne-க்கு மாறுங்கள். RailOne-ஐ பதிவிறக்கம் செய்து உங்கள் பயணத்தை இடையூறு இல்லாமல் தொடரவும்'' என்று கூறியுள்ளது.
ரயிலின் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் ரயில் ஒன் (Rail One) செயலியை இந்தியன் ரயில்வே கொண்டு வந்துள்ளது.
ரயில்வேயின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி
இந்த செயலி மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட் என அனைத்து வகையான டிக்கெட்டுகளையும் எடுக்க முடியும்.
மேலும் நீங்கள் புக் செய்த டிக்கெட் PNR நிலை, நீங்கள் பயணம் செய்யும் ரயில் பெட்டிகளின் நிலை (Coach Position), உங்கள் ரயில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது (Spot Your Train) போன்ற வசதிகளையும் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த செயலி மூலமாக உணவு ஆர்டர் செய்து கொள்ளலாம். போனில் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சென்று (RailOne) என குறிப்பிட்டு இப்போதே பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

