- Home
- Business
- Google Pay: பேங்க் அக்கவுண்ட் இல்லாமலேயே இனி பணம் அனுப்பலாம்.. 'கூகுள் பே' சூப்பர் அப்டேட்!
Google Pay: பேங்க் அக்கவுண்ட் இல்லாமலேயே இனி பணம் அனுப்பலாம்.. 'கூகுள் பே' சூப்பர் அப்டேட்!
டிஜிட்டல் பேமெண்ட் உலகில் கூகுள் பே ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர உள்ளது. வங்கி கணக்கு இல்லாமலேயே பணம் செலுத்த உதவும் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. எது என்ன? என விரிவாக பார்ப்போம்.

டிஜிட்டல் பேமெண்ட் காலம்
இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் பேமெண்ட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடைகள், உணவகங்கள் என எல்லா இடங்களிலும் இந்த வசதி அவசியமாகிவிட்டது. ஆனால், சில நேரங்களில் வங்கி கணக்குச் சிக்கல்களால் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதில் சிரமப்படுகின்றனர்.
மேலும், வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லாததால் அவர்களால் ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்ய முடிவதில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க, கூகுள் பே ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் UPI சர்க்கிள் கீழ் செயல்படும்.
கூகுள் பே-வின் பாக்கெட் மணி
ஆன்லைன் டிஜிட்டல் பேமெண்ட் உலகில் வந்துள்ள இந்த புதிய UPI சர்க்கிள் அம்சம் மூலம், ஒரு கணக்கு வைத்திருப்பவர் தனது நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களைத் தனது வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கலாம். இதற்காக கூகுள் பே அறிமுகப்படுத்தியுள்ள 'பாக்கெட் மணி' என்ற புதிய அம்சத்தைப் பயன்படுத்த வேண்டும்.
கூகுள் பே செயலியைத் திறந்தவுடன், 'People' ஆப்ஷனுக்குக் கீழே 'பாக்கெட் மணி' அம்சத்தைக் காணலாம். இதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், சொந்தமாக வங்கிக் கணக்கு இல்லாத ஒருவர், தனது குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரின் கணக்கைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.
வங்கிக் கணக்கு இல்லாமல் பணம் அனுப்பலாம்
இதற்கு கணக்கு வைத்திருப்பவரின் அனுமதி அவசியம். அனுமதி கிடைத்தவுடன் பணம் செலுத்தலாம். இதில் செலவு வரம்பை நிர்ணயிக்க முடியும், மேலும் ஒவ்வொரு கட்டணத்திற்கும் ஒப்புதல் அளிக்கும் வசதியும் உள்ளது.
தெளிவாக சொன்னால், வங்கிக் கணக்கைப் பயன்படுத்த அனுமதி பெற்ற நபர் பணம் செலுத்தும்போது, வங்கிக் கணக்கு வைத்திருப்பவருக்கு ஒரு நோட்டிஃபிகேஷன் செல்லும். அவர் விரும்பினால் அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்யவும் முடியும். சொந்தமாக வங்கிக் கணக்கு இல்லாதவர்கள், UPI சர்க்கிள் மூலம் GPay-யின் 'பாக்கெட் மணி' அம்சத்தைப் பயன்படுத்தி நண்பர் அல்லது உறவினரின் கணக்கிலிருந்து எளிதாகப் பணம் செலுத்தலாம்.
போனில் கூகுள் பே இருக்கணும்
கூகுள் பேயின் புதிய 'பாக்கெட் மணி' அம்சத்தைச் செயல்படுத்த, இரண்டாம் நிலை பயனரைச் சேர்க்க அவரது மொபைல் எண், கணக்கு வைத்திருப்பவரின் கான்டாக்ட் லிஸ்ட்டில் இருக்க வேண்டும். இருவரின் போனிலும் கூகுள் பே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அதே சமயம், இரண்டாம் நிலை பயனருக்கு UPI ID அல்லது UPI சர்க்கிள் கோட் இருக்க வேண்டும். இந்த 'பாக்கெட் மணி' அம்சத்தைப் பயன்படுத்தி ஒரு இரண்டாம் நிலை பயனர் மாதம் அதிகபட்சமாக ₹15,000 வரை செலவு செய்ய முடியும். இந்த வரம்பிற்கு மேல் செலவு செய்ய கணக்கு வைத்திருப்பவரின் அனுமதி தேவைப்படும்.
இரண்டாம் நபரின் KYC சரிபார்ப்பு கட்டாயம்
UPI சர்க்கிள் கீழ் GPay-யின் 'பாக்கெட் மணி' அம்சத்தை செட் செய்ய, முதலில் உங்கள் கூகுள் பே சென்று UPI சர்க்கிள் ஆப்ஷனைக் கிளிக் செய்து, 'பாக்கெட் மணி' பகுதிக்குச் செல்லுங்கள். அங்கு நீங்கள் சேர்க்க விரும்பும் நபரின் பெயர் அல்லது எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் அந்த நபரின் UPI சர்க்கிள் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.
அதன் பிறகு, மாதாந்திர வரம்பை செட் செய்து, இரண்டாம் நிலை பயனருடனான உங்கள் உறவுமுறை மற்றும் ஆதார் எண் போன்ற பிற தகவல்களைக் கொடுங்கள். கடைசியாக, UPI பின்னை உள்ளிட்டு அழைப்பை அனுப்புங்கள். இரண்டாம் நபர் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், செயல்முறை முடிந்தது. இதில் இரண்டாம் நபரின் KYC சரிபார்ப்பு கட்டாயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

