கடன் வாங்கியவர்களுக்கு மீண்டும் குட் நியூஸ்… வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
2026 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்க வாய்ப்புள்ளது, இது வீட்டு மற்றும் வாகனக் கடன் வாங்கியவர்களின் மாதத் தவணையை (EMI) குறைக்கும்.

வட்டி குறைப்பு
வங்கிக் கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி மீண்டும் ஒரு இனிய செய்தியைத் தரக்கூடும். 2026 ஆம் ஆண்டு வட்டி விகிதங்கள் மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வீட்டு கடன், வாகன கடன் போன்றவற்றை எடுத்துள்ளவர்களுக்கு மாத தவணை தொகை (இஎம்ஐ) மேலும் குறையலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ரிசர்வ் வங்கி
கடந்த 2025 ஆம் ஆண்டு மட்டும் ரிசர்வ் வங்கி நான்கு முறை ரெபோ விகிதத்தை குறைத்தது. இதன் காரணமாக பல வங்கிகள் தங்களின் கடன் வட்டிகளை குறைத்தன. இதனால் பொதுமக்களின் இஎம்ஐ சுமை குறைந்தது. ஆனால் வட்டி குறைப்பு இத்துடன் முடிவடையாது என்றும், 2026-ல் மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிப்ரவரி மாதக் கொள்கை
IIFL Capital வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2026 ஆம் ஆண்டில் மொத்தம் 50 அடிப்படை புள்ளிகள் (அடிப்படை புள்ளிகள்) வரை வட்டி விகிதம் குறையலாம். அதில் பிப்ரவரி மாதக் கொள்கை கூட்டத்தில் 25 புள்ளிகள், அதன் பிறகு மேலும் 25 புள்ளிகள் குறைக்கப்படலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் கடன்களின் வட்டி விகிதம் மேலும் தளர வாய்ப்பு உள்ளது.
ரெப்போ விகிதம்
தற்போது ரெப்போ விகிதம் மற்றும் கோர் பணவீக்க விகிதம் (Core CPI) இடையேயான வித்தியாசம் 2.8 சதவீதமாக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இந்த வித்தியாசம் சராசரியாக 1.1 சதவீதம் மட்டுமே இருந்தது. இதனால் ரெப்போ விகிதத்தை மேலும் குறைக்க இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார வளர்ச்சி
மேலும், UBI வெளியிட்ட சமீபத்திய தகவல்கள், 2026 பிப்ரவரி - ஏப்ரல் இருமாதக் கொள்கை கூட்டத்திலேயே 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பு நடக்கலாம் என கூறப்பட்டுள்ளது. பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி (GDP) போன்ற காரணிகள் சாதகமாக இருந்தால், வட்டி குறைப்பு தொடரும் வாய்ப்பு அதிகம் என்பதால், கடன் வாங்கியவர்களுக்கு 2026 நம்பிக்கையுடன் தொடங்குகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

