தங்கம் விலை உயர்வு: முதலீடு செய்ய சரியான நேரமா?
தங்கம் விலை மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. சர்வதேச முதலீடுகள் மற்றும் சந்தை நிலவரங்கள் தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தியுள்ளன. முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிடுவது அவசியம்.

மீண்டும் மேல் நோக்கி செல்லும் தங்கம் விலை - காத்திருக்கலாமா?
கடந்த வாரம் முதல் குறைந்திருந்த ஆபரணத்தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 975 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 340 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 440 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலையிலும் ஏற்றம்
சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 112 ரூபாய்க்கு விற்பனையானது.
திருச்சி, கோவை, மதுரையில் என்ன விலை?
மதுரையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 8 ஆயிரத்து 709 ரூபாயாகவும், கோவை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆபரணத்தங்கத்தின் விலை 8 ஆயிரத்து 714 ரூபாயாக உள்ளது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் விலை ஏற்ற இறக்கத்திற்கு காத்திருக்காமல் கையில் பணம் இருந்தால் அதனை தங்கத்தில் முதலீடு செய்வதை நடுத்தர வர்க்கத்தினர் வாடிக்கையாக கொண்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையிலும் ஏற்றம்
சர்வதேச ஸ்பாட் சந்தையில் கடந்த 7 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமாக உள்ளது. ஆசிய சந்தை வர்த்தகத்தில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 3,342 டாலராக உயர்ந்து, நான்காவது நாளாக அதன் ஏற்றத்தைத் தக்கவைத்துள்ளது.
திட்டமிட்டு வாங்குவது நலம்
அதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையிலும் தங்கம் விலை 0.67 சதவீதம் உயர்ந்து 96242 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை ரீடைல் சந்தையிலும் எதிரொலிக்கும் என்பதால் தங்கத்தை வாங்குவோர் திட்டமிட்டு வாங்குவது அவசியம். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ன் வரி விதிப்பு திட்டம், உலக நாடுகள் உடனான அமெரிக்காவின் நடப்புறவில் ஏற்படும் விரிசல் ஆகியவை சர்வதேச வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.