தங்கம் அடகு வைத்தால் இனி இவ்வளவு பணம் கிடைக்கும்.. பொதுமக்களே தெரிஞ்சுக்கோங்க
ரிசர்வ் வங்கி 2026-ஆம் ஆண்டு முதல் தங்கக் கடன் விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. கடன் அளவு, மதிப்பீடு, திருப்பிச் செலுத்தும் முறை, மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பு ஆகியவற்றில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆர்பிஐ தங்கக் கடன் புதிய விதிகள்
அவசர நேரத்தில் உடனடி பணமாக மாறும் சொத்து என்றால் அது தங்கம் தான். இந்த தேவையை மனதில் வைத்து, ரிசர்வ் வங்கி 2026ஆம் ஆண்டு தங்கக் கடன் விதிகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு, மோசடிகளைத் தடுக்கும் கட்டுப்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த புதிய விதிகள் கவனம் பெறுகின்றன.
தங்கக் கடனில் பெரிய மாற்றம்
புதிய நடைமுறையின் படி, கடன் அளவு மற்றும் மதிப்பீட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு எல்லோருக்கும் ஒரே மாதிரியாக 75% வரை கடன் வழங்கப்பட்ட நிலையில், இப்போது கடன் தொகையைப் பொறுத்து விகிதம் மாறுகிறது. ரூ.2.5 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு 85% வரை வழங்கப்படும். ரூ.5 லட்சம் வரை உள்ள கடன்களுக்கு 75% வழங்கப்படும். இதனால் சிறிய அளவில் கடன் எடுப்பவர்கள் அதிக நன்மை பெறுவார்கள்.
தங்கக் கடன் விதிகள்
மேலும், ரூ.2.5 லட்சத்திற்கு மேல் கடன் எடுப்பவர்களுக்கு கடன் திருப்பிச் செலுத்தும் திறனை வங்கிகள் கட்டாயமாக ஆய்வு செய்ய வேண்டும். இதனால் அதிக கடன் சுமையும் அபாயம் குறையும். ‘புல்லட் ரிப்பேமெண்ட்’ முறைக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 12 மாதங்கள் கடனை முடிக்க வேண்டும். பழைய கடனின் வட்டியை செலுத்தாமல் தொடர்ந்து நீட்டிப்பதற்கான வழியும் இப்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தங்கத்தின் தூய்மை
நகை மதிப்பீட்டிலும் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளது. கற்கள் மற்றும் பிற அலங்காரங்களை தவிர்த்து தங்கத்தின் எடையை மட்டும் கணக்கில் எடுப்பார்கள். கடந்த 30 நாட்களின் சராசரி விலை அல்லது தற்போதைய குறைந்த விலை அடிப்படையில் மதிப்பிடப்படும். மேலும், தங்கத்தின் தூய்மை, எடை, மதிப்பு போன்ற விவரங்களுடன் சான்றிதழ் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
ஆர்பிஐயின் நோக்கம்
கடனை முழுமையாக செலுத்திய பின் தங்கத்தை திரும்ப பெறுவதில் தாமதம் ஏற்பட்டால், வங்கிகள் தினமும் ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும் என்ற கடுமையான விதியும் கொடுக்கப்பட்டுள்ளது. கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலை வந்தால், ஏல முறையும் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும். தங்கம் வாங்குவதற்காக தங்கக் கடன் பெறுவதற்கு இப்போது அனுமதி இல்லை. அவசர தேவைகள் மற்றும் தொழில் தேவைகளுக்காக மட்டுமே இந்த வசதி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே ஆர்பிஐயின் நோக்கம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

