வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? லிமிட்டைத் தாண்டினால் சிக்கல் தான்... தங்க விதிகள் சொல்வது என்ன?
வீட்டில் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? வரம்பிற்கு மேல் தங்கம் வைத்திருந்தால் என்ன நடக்கும்? தங்கத்தை விற்றால் வரி கட்ட வேண்டுமா? இதுபோன்ற கேள்விகளுக்கு இத்தொகுப்பில் விரிவான பதில்களைத் தெரிந்துகொள்ளலாம்.
வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் தங்கம் வாங்குவது பாரம்பரியமாகத் தொடரும் வழக்கம். தங்கம் ஒரு முதலீடாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. பெண்களுக்கு விதவிதமான நகைகளை அணிவதை விரும்புகிறார். அவசர காலத்தில் கைகொடுக்கும் சொத்தாகவும் பலர் தங்கத்தை வங்கி வைக்கிறார்கள். ஆனால் வீட்டில் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? வரம்பிற்கு மேல் தங்கம் வைத்திருந்தால் என்ன நடக்கும்? தங்கத்தை விற்றால் வரி கட்ட வேண்டுமா? இதுபோன்ற கேள்விகளுக்கு இத்தொகுப்பில் விரிவான பதில்களைத் தெரிந்துகொள்ளலாம்.
வீட்டில் தங்கம் வைத்திருப்பதற்கான வரம்பு
இந்திய அரசின் வருமான வரி விதிகளின் கீழ், வீட்டில் தங்கத்தை வைத்திருப்பதற்கு ஒரு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பு பெண்களுக்கும் ஆண்களுக்கும் வேறுபட்டது. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட அளவு தங்கத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்க முடியும். இந்த நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக தங்கத்தை வீட்டில் வைத்திருந்தால், அதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். தங்கம் வாங்கியது தொடர்பான ரசீதுகளை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
பெண்கள் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
வருமான வரிச் சட்டத்தின்படி திருமணமான பெண்கள் தங்களிடம் 500 கிராம் தங்கத்தை வைத்திருக்கலாம். அதேசமயம் திருமணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கத்தை வைத்திருக்கலாம். ஆண்கள் 100 கிராம் வரை மட்டுமே தங்கத்தை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது.
பரம்பரையாக வரும் தங்கத்திற்கு வரி உண்டா?
சட்டப்பூர்வமாக உங்கள் வருமானத்தில் தங்கத்தை வாங்கியிருந்தால், அதற்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. தங்கத்திற்கான விதிகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் தங்க நகைகள் வைத்திருந்தால் நகைகள் பறிமுதல் செய்யப்படாது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக தங்கம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கான ரசீதைக் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் அந்தத் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்கத்தை விற்றால் வரி கட்ட வேண்டுமா?
வீட்டில் தங்கம் வைத்திருப்பதற்கு வரி (Tax on Gold Jewellery Holdings) கிடையாது. ஆனால் தங்கத்தை விற்றால் அதற்கு வரி செலுத்த வேண்டும். தங்கத்தை 3 ஆண்டுகள் வைத்திருந்து விற்றால், அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் 20 சதவிகிதம் நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) விதிக்கப்படும்.
தங்கப் பத்திரங்கள்
3 ஆண்டுகளுக்குள் வாங்கிய தங்கப் பத்திரத்தை விற்றால், அதிலிருந்து கிடைக்கும் லாபம் உங்கள் வருமானத்தில் சேர்க்கப்படும். அதற்கு வருமான வரி அடுக்கின் அடிப்படையில் வரி விதிக்கப்படும். தங்கப் பத்திரத்தை 3 ஆண்டுகளுக்குப் பிறகு விற்றால், லாபத்திற்கு 30% வரி விதிக்கப்படும். ஆனால், தங்கப் பத்திரத்தை முதிர்வுக் காலம் வரை வைத்திருந்தால், அதிலிருந்து கிடைக்கும் லாபத்திற்கு வரி கிடையாது.