- Home
- Business
- வெறும் ரூ.100 முதலீடு... ரூ.1 கோடி லாபம்; எலுமிச்சையால் ஒட்டுமொத்த கிராமத்தையும் வாழ வைக்கும் ஒடிசா விவசாயி!
வெறும் ரூ.100 முதலீடு... ரூ.1 கோடி லாபம்; எலுமிச்சையால் ஒட்டுமொத்த கிராமத்தையும் வாழ வைக்கும் ஒடிசா விவசாயி!
யானைகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க வெறும் ரூ.100 முதலீட்டில் தொடங்கப்பட்ட 50 எலுமிச்சைக் கன்றுகள், இன்று ஒரு கிராமத்தின் பொருளாதாரத்தையே புரட்டிப்போட்டு, ஆண்டுக்கு ரூ.1 கோடி விற்றுமுதல் ஈட்டும் சர்வதேச வணிகமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ரூ.100 முதலீடு... ரூ.1 கோடி லாபம் கோடீஸ்வரரான ஒடிசா விவசாயி!
தந்தையின் முயற்சியால் வெறும் 100 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட ஒரு சிறிய எலுமிச்சைத் தோட்டத்தை, ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான விற்றுமுதல் (Turnover) ஈட்டும் மாபெரும் வணிகமாக மாற்றி சாதனை படைத்துள்ளார் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம் விவசாயி சந்தோஷ் சாஹு.
ஒடிசாவின் அங்குல் (Angul) மாவட்டத்தில் உள்ள ஓகி (Ogi) கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ், தனது கிராமத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரு வலுவான விநியோக வலையமைப்பை உருவாக்கியுள்ளார். மேலும், தங்கள் கிராமத்தில் விளையும் நாட்டு ரக 'காகிஜி எலுமிச்சை'களை (Kagzi Lemons) அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற சர்வதேச சந்தைகளுக்கும் வெற்றிகரமாக ஏற்றுமதி செய்து வருகிறார்.
யானைகள் தொல்லையிலிருந்து பிறந்த மாற்று யோசனை!
இந்த வெற்றிக் கதை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. சந்தோஷின் தந்தை கார்த்திகா சாஹு, காட்டு யானைகள் மற்றும் குரங்குகளின் தொடர் தாக்குதல்களைத் தாங்கி வளரக்கூடிய ஒரு மாற்றுப் பயிரைத் தேடிக்கொண்டிருந்தார். நெல் மற்றும் நிலக்கடலை போன்ற பாரம்பரியப் பயிர்களை வனவிலங்குகள் அடிக்கடி சேதப்படுத்தி வந்ததால், அப்பகுதி விவசாயிகளுக்குக் கடுமையான நஷ்டம் ஏற்பட்டு வந்தது.
விலங்குகளின் பாதிப்பிலிருந்து தப்பிக்க கார்த்திகா எலுமிச்சை சாகுபடியைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். தோட்டக்கலைத் துறையிடம் இருந்து தலா ரூ.2 வீதம் 50 காகிஜி எலுமிச்சைக் கன்றுகளை வாங்கினார். அவரது மொத்த முதலீடு வெறும் ரூ.100 மட்டுமே. இந்தச் சோதனை முயற்சி மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. செடிகள் செழித்து வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கத் தொடங்கின. இதைப் பார்த்த கிராமத்தின் பிற விவசாயிகளுக்கும் எலுமிச்சை சாகுபடி மீது ஆர்வம் ஏற்பட்டது.
கிராம விவசாயிகளை இணைத்த சந்தோஷின் தொழில் யுக்தி!
சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை மறைந்த பிறகு, சந்தோஷ் சாஹு தோட்டப் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டார். விவசாயிகள் எலுமிச்சையை அதிகளவில் உற்பத்தி செய்தாலும், அவற்றை வாங்கப் போதிய வாடிக்கையாளர்கள் இல்லாததையும், பலரும் உள்ளூர் சந்தைகளில் குறைந்த விலைக்கு விற்பதையும் அவர் கவனித்தார். இதையடுத்து, கிராமத்து விவசாயிகளிடமிருந்து எலுமிச்சையை நேரடியாக மொத்தமாக வாங்கி, பெரிய நகர சந்தைகளில் விற்கத் தொடங்கினார்.
இதுகுறித்து சந்தோஷ் கூறுகையில், ஆரம்பத்தில் என் தந்தை விளைந்த எலுமிச்சைகளை உள்ளூர் சந்தையில்தான் விற்று வந்தார். நான் மற்ற விவசாயிகளிடமிருந்தும் எலுமிச்சைகளை வாங்கி பெரிய சந்தைகளுக்குக் கொண்டு செல்லத் தொடங்கினேன். இது எங்களின் எலுமிச்சை அதிக வாடிக்கையாளர்களைச் சென்றடையவும், பெருமளவில் விற்பனை செய்யவும் பெரிதும் உதவியது என்றார்.
சந்தோஷ் தனது 1 ஏக்கர் நிலத்தில் சுமார் 120 எலுமிச்சை மரங்களை வளர்த்து வருகிறார். அத்துடன் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து எலுமிச்சைகளைக் கொள்முதல் செய்கிறார். இங்கு விளையும் எலுமிச்சைகள் அங்குல், புவனேஸ்வர், கட்டாக், தேன்கனல் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர் வரை விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இந்த எலுமிச்சைகள் தரம் பிரிக்கப்பட்டு அமெரிக்கா (US) மற்றும் பிரிட்டன் (UK) உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வணிக மாதிரி மற்றும் லாப விபரம்
சந்தோஷ் விவசாயிகளிடமிருந்து 100 எலுமிச்சைகளை ரூ.220 முதல் ரூ.280 வரை கொள்முதல் செய்கிறார். பின்னர் அவற்றை ரூ.300 முதல் ரூ.320 வரை விற்பனை செய்கிறார். அவரது மொத்த விற்றுமுதலில் சுமார் 60 சதவீதம் விவசாயிகளுக்குக் கொள்முதல் தொகையாகவே வழங்கப்படுகிறது. இதுதவிர, எலுமிச்சைக் கன்றுகளையும் தலா ரூ.20-க்கு அவர் விற்பனை செய்து வருகிறார்.
"எனது 1 ஏக்கர் நிலத்தில் நாட்டு எலுமிச்சையைச் சாகுபடி செய்வதுடன், கிராமத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்தும் கொள்முதல் செய்து விற்பனை செய்கிறேன். இரண்டு முக்கிய அறுவடைப் பருவங்கள் மூலம் எனது ஆண்டு விற்றுமுதல் தற்போது ரூ.1 கோடியைத் தாண்டியுள்ளது" என்று சந்தோஷ் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.
இங்கு விளையும் எலுமிச்சைகள் மெல்லிய தோலும், அதிக சாறும் கொண்ட 'காகிஜி நிம்பு' ரகத்தைச் சேர்ந்தவை. ஒரு எலுமிச்சை மரம் நட்ட 3 முதல் 4 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும். மரங்களின் வயது கூடக்கூட விளைச்சலும் பலமடங்கு அதிகரிக்கும். விளைச்சல் குறித்து விளக்கிய சந்தோஷ், நன்றாக வளர்ந்த 8 முதல் 9 ஆண்டுகள் பழமையான 12 அடி உயர மரம், அறுவடைக் காலத்தில் வாரத்திற்கு 1,000-க்கும் அதிகமான எலுமிச்சைகளைத் தரும். அதேநேரம் 10 அடி உயர மரம் வாரத்திற்கு 600-க்கும் அதிகமான காய்களைத் தரும் என்கிறார்.
மொத்த கிராமத்தின் தலையெழுத்தையே மாற்றிய பயிர்!
ஓகி கிராமத்தில் உள்ள சுமார் 700 குடும்பங்களில், தற்போது 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எலுமிச்சை சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கிராமத்தைச் சுற்றிலும் 150 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் எலுமிச்சைத் தோட்டங்கள் பரந்து விரிந்துள்ளன. இதன் மூலம் ஒரு விவசாயி எலுமிச்சை மூலம் மட்டுமே ஆண்டுக்குச் சராசரியாக ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை உபரி வருமானம் ஈட்டுகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயி, தனது 1.5 ஏக்கர் நிலத்தில் 200 எலுமிச்சை மரங்களை வளர்த்து, இரண்டு அறுவடைப் பருவங்களில் சுமார் ரூ.80,000 வருமானம் ஈட்டி வருகிறார்.
அக்கிராமத்தைச் சேர்ந்த பஞ்சனன் சாஹு என்ற விவசாயி கூறுகையில், நாங்கள் மரங்களிலிருந்து பறிக்கும் எலுமிச்சைகளை சந்தோஷிடம் விற்கிறோம். அறுவடைக்கு ஏற்ப 3,000 முதல் 4,000 எலுமிச்சைகளை அவரிடம் கொடுப்போம்; அதற்கான பணத்தை அவர் உடனே கொடுத்துவிடுவார். அவர் அதனை கட்டாக் மற்றும் புவனேஸ்வர் சந்தைகளுக்குக் கொண்டு செல்கிறார். எங்கள் குடும்ப வாழ்வாதாரத்திற்கு இந்த வருமானமே முக்கிய ஆதாரமாக உள்ளது என்றார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.













