ரூ.15,000 EPF வரம்புக்கு முடிவா? லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு குட் நியூஸ் வருமா?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தின் சம்பள உச்சவரம்பை திருத்துவது குறித்து நான்கு மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு இந்திய உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இபிஎப் சம்பள வரம்பு
ஊழியர்களின் சமூக பாதுகாப்பைச் சார்ந்த முக்கிய விவகாரத்தில், இந்திய உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் சம்பள உச்சவரம்பை திருத்துவது குறித்து, நான்கு மாதங்கள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக EPF சம்பள வரம்பு மாற்றமின்றி இருப்பதால், பல தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நன்மைகளில் இருந்து விலக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. சமூக ஆர்வலர் நவீன் பிரகாஷ் நௌடியால் தாக்கல் செய்த மனுவில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) EPF திட்டத்தில், மாதம் ரூ.15,000-க்கும் அதிக சம்பளம் பெறும் ஊழியர்கள் முழுமையாக சேர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பல கோடி ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இபிஎப்அப்டேட்
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், நாட்டின் பல பகுதிகளில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,000-ஐ கடந்துவிட்ட போதிலும், EPF சம்பள வரம்பு புதுப்பிக்கப்படாதது அநியாயமானது என்று வாதிட்டனர். இதனால், பணவீக்கம், குறைந்தபட்ச ஊதியம், ஒருவருக்கு உள்ள வருமானம் போன்ற பொருளாதார காரணிகளுடன் எந்த தொடர்பும் இல்லாமல் சம்பள உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் EPF சம்பள வரம்பு திருத்தங்கள் சீரற்ற முறையில் நடந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை முடித்து வைத்த உச்சநீதிமன்றம், மனுதாரர் வாரங்களுக்கு மத்திய அரசிடம் முறையான மனுவை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதனை பெற்ற நான்கு மாதங்களில் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2022-ல் EPFO-வின் உபகுழு சம்பள வரம்பை உயர்த்த பரிந்துரைத்தது, அது மத்திய வாரியத்தால் ஒப்புதல் பெற்றது குறிப்பிடப்பட்டது. இருப்பினும், இதுவரை மத்திய அரசு எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்பதால், தற்போது உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

