தங்கம் மாதிரி ஏறும் முட்டை விலை! இனி ஆம்லேட் கனவுதான்.. விலை எவ்வளவு?
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி பேக்கரி பொருட்களுக்கான தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

முட்டை விலை உயர்வு
நாமக்கல் மண்டலம் நாட்டின் முக்கிய முட்டை உற்பத்தி மையமாகக் கருதப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் இந்தப் பகுதியில் இருந்து, தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு தினமும் லட்சக்கணக்கான முட்டைகள் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், நாமக்கல் முட்டை விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நாமக்கல் முட்டை விலை
முட்டை கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு சமீப நாட்களாக விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரு முட்டைக்கு ரூ.6.25 என நிர்ணயிக்கப்பட்ட விலை, தற்போது மேலும் 5 காசுகள் உயர்ந்து ரூ.6.30 ஆக மாற்றப்பட்டது. இது வரலாற்றிலேயே அதிகபட்சமாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்வு ஏற்பட்டு பண்ணை கொள்முதல் விலை ரூ.6.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அதிகபட்சமாக ரூ.5.90 மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
பண்டிகை கால தேவை
இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலம். இந்த கேக், பிஸ்கட், பேக்கரி பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பதால் முட்டை தேவையும் திடீரென உயர்ந்துள்ளது. பெரிய பேக்கரிகள் மற்றும் உணவகங்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் முட்டை கொள்முதல் செய்வதால், சந்தையில் தேவை–விநியோக சமநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய முட்டை விலை
பண்ணை கொள்முதல் விலை உயர்ந்ததன் தாக்கம் சில்லறை சந்தைகளிலும் தெளிவாக தெரிகிறது. தற்போது பல பகுதிகளில் ஒரு முட்டை ரூ.7 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில நகர்ப்புறங்களில் இதைவிட கூடுதல் விலை வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் கூறுகிறார்கள். இதனால், தினசரி உணவில் முட்டையை முக்கிய புரதமாக பயன்படுத்தும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் இதனால் அதிக சுமையை எதிர்கொள்கின்றன. முட்டை உற்பத்தியாளர்கள் தரப்பில், இந்த விலை உயர்வு தற்காலிகமானது என்ற நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
சில்லறை முட்டை விலை
பண்டிகை காலம் முடிந்ததும் பேக்கரி தேவைகள் குறையும் போது விலை ஓரளவு சரிவடையும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், குளிர்காலத்தின் காரணமாக கோழிகளின் முட்டை உற்பத்தி குறைவாக உள்ளது, விலை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் வரும் குறைவு என்றும் தெரிவிக்கின்றனர். வரும் நாட்களில் சந்தை நிலவரம் முட்டை விலையின் போக்கை தீர்மானிக்கும் என்பதால், பொதுமக்கள் அதனை கவனத்துடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

