கிரெடிட் கார்டு இருக்கா? - அப்ப இதை செய்யவே கூடாது
கிரெடிட் கார்டுகளை சரியாகப் பயன்படுத்தினால் லாபம், இல்லையெனில் சிக்கல். பில்லில் சிக்காமல் இருக்க, சில தவறுகளைத் தவிர்க்க வேண்டும்.

கிரெடிட் கார்டுகள் - கையாள்வதில் கவனம் தேவை
கிரெடிட் கார்டை சரியாக அவசர தேவைகளுக்கு பயன்படுத்தி அதில் லாபம் பார்ப்பவர்களை விட அதன் பில்லில் சிக்கி தவிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேஷ்பேக் போன்ற சாதகமான விஷயங்கள் இருந்தாலும், கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் சிறிய தவறு செய்தால் அது நம்மை சிக்கலில் சிக்க வைத்து விடும். அப்படி செய்யக்கூடாத தவறுகளையும் அதனை எப்படி தவிர்ப்பது என்பது குறித்தும் இப்போது பார்ப்போம்
கிரெடிட் கார்டு STATEMENT - கவனமாக படிக்க வேண்டும்
ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படும் கிரெடிட் கார்டு அறிக்கைகளை கண்டிப்பாக படிக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் கிரெடிட் கார்டு அறிக்கையில் பில் கட்டணம், குறைந்தபட்ச கட்டணம் போன்ற அடிப்படையான விஷயங்களை மட்டுமே பார்ப்பார்கள். மற்றபடி, அறிக்கையில் உள்ள பரிவர்த்தனைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அறிக்கையில் உள்ள ஒவ்வொரு பரிவர்த்தனையும் நீங்கள் மேற்கொண்டதுதானா என்பதை சரிபார்க்க வேண்டும். சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் இருந்தால் அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகும்.
ஒன்றுக்கு மேல் வேண்டாம்
கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்கள் புதிது புதிதாக கிரெடிட் கார்டுகளை வாங்குவதற்கு விண்ணப்பிப்பதைத் தவிர்ப்பது நல்லது. கூடுதல் கிரெடிட் கார்டுகளை வாங்குவதற்காக விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட வங்கி உங்களது சிபில் ஸ்கோர், கிரெடிட் ரிப்போர்ட் பற்றி ஆய்வு செய்வார்கள். இப்படி பல முறை உங்களது கிரெடிட் ரிப்போர்ட் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டால், உங்களது சிபில் ஸ்கோர் கண்டிப்பாக பாதிக்கப்படும். ஒரு கார்டு வாங்கிய பின் மற்றொரு கார்டு வாங்குவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதக் கால இடைவெளி விடுவது நல்லது.
சரியான நேரத்தில் BILL கட்டுவது கட்டாயம்
பில் கட்டணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலுவைத் தொகையை உரிய தேதிக்குள் முறையாக செலுத்த வேண்டும். பில் கட்டணத்தை தாமதமாக செலுத்தினால், தாமதக் கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும். மேலும், தாமதமாக கட்டணம் செலுத்தினால் அதிக வட்டியும் வசூலிக்கப்படும். இதனால், உங்களது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். கடன் சுமை ராக்கெட் போல் உச்சத்தை தொடும்
முழு பில் தொகையை கட்ட வேண்டும்
கிரெடிட் கார்டு பில்களில், செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை (Due Amount) மற்றும் குறைந்தபட்ச நிலுவைத் தொகை (Minimum Due Amount) குறிப்பிடப்பட்டிருக்கும். நிலுவைத் தொகையை விடக் குறைந்தபட்ச நிலுவைத் தொகை குறைவாகத்தான் இருக்கும் என்பதால் கட்டணத்தை குறைக்கலாம் என்ற ஐடியாவில், பலரும் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை மட்டும் செலுத்துகின்றனர். இது தவறு இல்லை என்றாலும், இதனால் பின்விளைவுகள் ஏற்படும். குறைந்தபட்ச நிலுவைத் தொகையை மட்டும் செலுத்தினால், மீதமுள்ள தொகைக்கு வட்டி செலுத்த வேண்டும். மேலும், கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலமும் நீட்டிக்கப்படும். இதுதவிர, சிபில் ஸ்கோர் அடி வாங்கும். எனவே எப்போதும் முழு பில் தொகையை கட்டுவதே நல்லது.
ரொம்ப ஈசிதான் - கடைபிடித்தால் பிரச்சினை இல்லை
இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களையும் கடைப்பிடித்து, சரியாக பில் கட்டணங்களை செலுத்தி வந்தால் கிரெடிட் கார்டு, சிபில் ஸ்கோர் சார்ந்த பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். கூடுதலாக, அதிகம் செலவு செய்யாமல் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் கடன் சுமையையும் அதிகரிக்காது. சில சமயம் நாம் செய்யும் சிறிய தவறுகளே பெரிய சிக்கலில் தள்ளிவிடும். அதனை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருந்தால் கடன் பிரச்சினைகளை தீர்க்கலாம்.