- Home
- Business
- UPI யுகத்திலும் குறையாத மோகம்.. பணத்தை கையில் வைக்கும் இந்தியர்கள்.. SBI அறிக்கையில் சுவாரஸ்ய தகவல்!
UPI யுகத்திலும் குறையாத மோகம்.. பணத்தை கையில் வைக்கும் இந்தியர்கள்.. SBI அறிக்கையில் சுவாரஸ்ய தகவல்!
SBI Report 2026: இந்தியாவில் UPI பயன்பாடு அதிகரித்தாலும் மக்களை பணத்தை ரொக்கமாக வைத்துக் கொள்வதும் அதிகரித்துள்ளது என்று எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரொக்க பணப்புழக்கம் அதிகரிப்பு
இந்தியாவில் UPI மற்றும் பிற டிஜிட்டல் வழிகளில் நிதிப் பரிவர்த்தனைகள் செய்வது அதிகரித்திருந்தாலும், பணப்புழக்கமும் ஒரே நேரத்தில் அதிகரித்து ஒரு கலவையான சமநிலையை (hybrid equilibrium) உருவாக்கி வருகிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) சமீபத்திய ஆய்வு அறிக்கை இந்த சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த ரிப்போர்ட்படி, புழக்கத்தில் உள்ள பணத்தின் (CiC) அளவு, FY26-ல் 11.9% அதிகரித்து, ₹41.6 டிரில்லியன் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. "2016-ல் நடந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இதுதான் அதிக வளர்ச்சி" என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதே நேரத்தில், UPIடிஜிட்டல் பரிவர்த்தனைகளும் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. இதன் மதிப்பு 20.6% அதிகரித்து ₹314 டிரில்லியனாகவும், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 30% அதிகரித்து 241.6 பில்லியனாகவும் உயர்ந்துள்ளது.
கேஷ் பாரடாக்ஸ் என்றால் என்ன?
இந்த இரட்டை வளர்ச்சியை "கேஷ் பாரடாக்ஸ்" (cash paradox) என்று குறிப்பிடும் SBI அறிக்கை, இந்தியாவிற்கு பணமும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் இரண்டுமே இன்றியமையாதவை என்று கூறுகிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று மாற்றாக இல்லாமல், ஒன்றை ஒன்று சார்ந்து வளர்ந்து வருகின்றன. குறிப்பாக, சிறிய தொகைகளுக்கான பரிவர்த்தனைகளில் UPI ஆதிக்கம் செலுத்துகிறது.
"வியாபாரிகளுக்குச் செல்லும் பரிவர்த்தனைகளில் (P2M) சுமார் 86% மற்றும் தனிநபர்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளில் (P2P) சுமார் 60% ₹500-க்கும் குறைவானவை" என்று அறிக்கை கூறுகிறது. அதே சமயம், முறைசாரா தேவைகளுக்கும், முன்னெச்சரிக்கைக்காகவும் மக்கள் பணத்தையே நம்பியுள்ளனர்.
எஸ்பிஐ ரிப்போர்ட் சொல்வது என்ன?
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிதான், பணப் பயன்பாடு பெருமளவில் அதிகரித்திருப்பதற்கான முக்கிய காரணம் என்று SBI ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. FY12 முதல் FY26 வரை, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆண்டுக்கு 9.4% கூட்டு வளர்ச்சியைக் கண்டது. அதே காலகட்டத்தில், புழக்கத்தில் உள்ள தனிநபர் பணத்தின் அளவு 9.0% வளர்ச்சி அடைந்துள்ளது.
"புழக்கத்தில் உள்ள தனிநபர் பணத்தின் வளர்ச்சி, GDP வளர்ச்சியை விட சற்று குறைவாகவே உள்ளது" என்று அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த சிறிய இடைவெளியை UPI பரிவர்த்தனைகள் ஈடுசெய்வதாகவும், இது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் படிப்படியாக வளர்ந்து வருவதைக் காட்டுவதாகவும் தெரிகிறது.
ரொக்க பணம் 5 மடங்கு அதிகரிப்பு
இந்த அறிக்கையின் ஒரு முக்கிய கண்டுபிடிப்பு, மக்கள் கையில் வைத்திருக்கும் பணத்திற்கும், ATM-களில் இருந்து எடுக்கும் பணத்திற்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருப்பதுதான். இது மக்கள் முன்னெச்சரிக்கைக்காக பணத்தை சேமித்து வைப்பதைக் காட்டுகிறது. தனிநபர் கையில் வைத்திருக்கும் பணத்திற்கும், ATM-ல் இருந்து எடுத்த பணத்திற்கும் இடையிலான வித்தியாசம் FY24-ல் ₹1,804 ஆக இருந்தது, FY26-ல் ₹9,127 ஆக, அதாவது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
"சமூக ஊடகங்கள் மூலம் பரவும் செய்திகளால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மை மற்றும் பதற்றம் காரணமாக, மக்கள் முன்னெச்சரிக்கைக்காக பணத்தை கையில் வைத்திருக்க விரும்புகிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என அறிக்கை கூறுகிறது.
பணம்தான் இப்போதும் கிங்
பணத்தாள்களின் புழக்கத்தைப் பொறுத்தவரை, அதிக மதிப்புள்ள நோட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மொத்த பண மதிப்பில் சுமார் 86% ₹500 நோட்டுகளாகவே உள்ளன. இருப்பினும், சிறிய மதிப்பு நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் உத்தரவைத் தொடர்ந்து, ₹100 நோட்டுகளின் பங்கு மார்ச் 2025-ல் 6.2% ஆக இருந்து, மார்ச் 2026-ல் 8.2% ஆக அதிகரித்துள்ளது. இது குறைந்த மதிப்பு நோட்டுகள் வேகமாக கைமாறுவதைக் காட்டுகிறது.
இதற்கிடையில், இந்தியாவின் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. சுமார் ₹1,016 கோடி மட்டுமே புழக்கத்தில் உள்ளது, இது மொத்த பணப்புழக்கத்தில் வெறும் 0.02% மட்டுமே. எனவே, இதுகுறித்த விழிப்புணர்வு, பயன்பாட்டு எளிமை மற்றும் கூட்டு முயற்சிகளை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. "UPI பிரபலமாகி வந்தாலும், பணம்தான் இப்போதும் கிங்..." என்று கூறும் SBI ஆய்வு, பொருளாதாரம் மேலும் முறைப்படுத்தப்படும்போது, பணமும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் சேர்ந்தே வளரும் என்று கணித்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

