ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு ஒப்புதல்.. இந்திய பயணிகளுக்கு குட் நியூஸ்
இந்த அறிவிப்பால், சுற்றுலாப் பயணிகளும் வணிகர்களும் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக ரூ.25,000 வரை இந்திய ரூபாய் நோட்டுகளை கொண்டு செல்லலாம்

ரூ.25,000 உச்சவரம்பு
10 ஆண்டுகளாக காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேபாளம் செல்லும் இந்தியப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இதுவரை தடை செய்யப்பட்ட இந்திய ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகள், இனி நேபாளத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவால், பயணத்தின் போது சிறிய நோட்டுகள் தேடி அலைந்த அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிகபட்சமாக ரூ.25,000 வரை இந்திய ரூபாய் நோட்டுகளை கொண்டு செல்லலாம் என நேபாள அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய ரூபாய் அனுமதி
இந்த அறிவிப்பு, நேபாளம் அடிக்கடி செல்லும் சுற்றுலா பயணிகள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு பெரிய நிம்மதியை அளிக்கிறது. கடந்த ஒரு தசாப்தமாக, இந்திய ரூபாய் உயர்மதிப்பு நோட்டுகள் செல்லாது என்பதால், பயணிகள் பணமாற்றத்தில் சிரமம் அடைந்து வந்தனர். தற்போது அந்த தடையை நீக்கி, நேபாள அரசு முக்கிய தளர்வை அறிவித்துள்ளது. இதனால் இந்திய–நேபாள சுற்றுலா மற்றும் வர்த்தக உறவுகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.500 நோட்டு அனுமதி
இந்த முக்கிய முடிவு, நேபாள அமைச்சரவையின் சமீபத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்திய மற்றும் நேபாள குடிமக்கள் இருவரும் ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை கொண்டு பயணம் செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, அண்டை நாடுகளுக்குப் பயணம் செய்ய உயர்மதிப்பு நோட்டுகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி தனது விதிகளில் அடிப்படை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ரூ.25,000 என்ற உச்சவரம்பு கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
இந்திய–நேபாள சுற்றுலா
இந்த தடை காரணமாக, நேபாளத்தின் சுற்றுலா துறை கடந்த சில ஆண்டுகளாக பெரும் பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக கேசினோக்கள், பெரிய ஹோட்டல்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள சந்தைகள் வருவாய் இழப்பை சந்தித்தன. இந்திய சுற்றுலா பயணிகள் பணப் பற்றாக்குறையால் செலவு செய்ய முடியாமல் தவித்தனர். சில நேரங்களில் சில விதிமுறைகள் தெரியாமல் அபராதம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
நேபாள அரசு அறிவிப்பு
தற்போது இந்த தளர்வு, நேபாள சந்தைகள் மீண்டும் உயிர் பெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நேபாள ராஷ்டிர வங்கியின் பேச்சாளர் குரு பிரசாத் பவுடேல் கூறியதாக, அரசின் முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாகவும், நேபாள அரசிதழில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் மத்திய வங்கி சுற்றறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அந்தச் சுற்றறிக்கை வெளியான பிறகு, ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை வைத்திருப்பது முழுமையாகச் சட்டபூர்வமாகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

