100 Rupee Note : ₹100 நோட்டில் இத்தனை ரகசியங்களா? இதுவரை கவனிக்காத சுவாரஸ்ய தகவல்கள்
100 Rupee Note: உங்கள் கையில் இருக்கும் ₹100 நோட்டில் இத்தனை ரகசியங்களா? லாவெண்டர் நிறம் ஏன், ராணி கி வாவ் ஏன் இடம்பெற்றுள்ளது, வாட்டர்மார்க், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான குறியீடு என முழு தகவல்களையும் இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

100 ரூபாய் நோட்டு
100 ரூபாய் நோட்டு என்றாலே நம் நினைவுக்கு வருவது அதன் லாவெண்டர் நிறமும், மகாத்மா காந்தியின் உருவமும் தான். ஆனால், தினமும் கைகளில் புழங்கும் இந்தச் சிறிய தாளுக்குள் இந்தியாவின் வரலாறு, கட்டிடக்கலை, மொழிப் பன்மை, தேசிய அடையாளம் மட்டுமல்லாமல், கள்ளநோட்டுகளைத் தடுக்கும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
அப்படி அதில் இருக்கும் ஒவ்வொரு குறியீட்டுக்கும் என்ன அர்த்தம்? ராணி கி வாவ் (RANI KI VAV) படம் எதற்காக இடம்பெற்றுள்ளது? ஏன் இந்த நிறம் தேர்வு செய்யப்பட்டது? இந்த நோட்டு எப்போது அறிமுகமானது? உள்ளிட்ட 100 ரூபாய் நோட்டின் முழு பின்னணியையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
புதிய 100 ரூபாய் நோட்டு
தற்போது புழக்கத்தில் இருக்கும் புதிய வடிவ 100 ரூபாய் நோட்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மகாத்மா காந்தி புதிய தொடர் (Mahatma Gandhi New Series) கீழ் 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முக்கிய அடையாளமாக லாவெண்டர் (Lavender) நிறம் உள்ளது. நோட்டின் அளவு 66 மி.மீ x 142 மி.மீ ஆகும்.
100 ரூபாய் நோட்டின் முன்புறத்தில் என்னென்ன இருக்கிறது?
- முன்பக்கத்தில் நோட்டின் மையப்பகுதியில் மகாத்மா காந்தியின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது. அதன் கீழ் அவரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
- இடதுபுறத்தில் ₹100 மதிப்பு எண் மற்றும் தேவநாகரி எழுத்தில் १०० என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பல மொழி மற்றும் எழுத்து மரபுகளை பிரதிபலிக்கும் அம்சங்களில் ஒன்றாகும்.
- 100 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள முக்கியமான கள்ளநோட்டு தடுப்பு அம்சங்களில் ஒன்று பச்சையிலிருந்து நீலமாக மாறும் windowed security thread. இதில் भारत மற்றும் RBI போன்ற எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாதுகாப்பு நூலின் முக்கிய சிறப்பு, நோட்டை வெவ்வேறு கோணங்களில் சாய்த்துப் பார்க்கும்போது அதன் நிறம் பச்சையிலிருந்து நீலமாக மாறும்.
- நோட்டின் பல பகுதிகளில் மிகச்சிறிய எழுத்தில் RBI, भारत, India, 100 போன்றவை இடம்பெறுகின்றன.
பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காக
- 100 ரூபாய் நோட்டின் முன்பக்கத்தில், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் நோட்டை அடையாளம் காண உதவும் வகையில் உயர்த்தப்பட்ட அச்சு/தொட்டு (tactile) அம்சங்கள் இடம்பெற்றுள்ளன
- குறிப்பாக வலதுபுறத்தில் உள்ள ₹100 மதிப்பு எண் , முக்கோண வடிவ அடையாளம் (triangle with bleed lines), நான்கு கோண வெட்டுக்கோடுகள் (Four Angular Bleed Lines) ஆகியவை உயர்த்தப்பட்ட அச்சுத் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- நோட்டை விரலால் மெதுவாகத் தொட்டுப் பார்த்தால், சில எழுத்துகள் மற்றும் குறியீடுகள் மற்ற பகுதிகளைவிட சற்று உயரமாக இருப்பதை உணர முடியும். இந்த உயர்ந்த அச்சு மூலம், நோட்டின் மதிப்பை தொட்டுப் பார்த்தே எளிதாக அடையாளம் காண முடியும்.
கள்ளநோட்டுகளை கண்டறிய
100 ரூபாய் நோட்டை வெளிச்சத்திற்கு எதிராகப் பிடித்துப் பார்த்தால் சில பாதுகாப்பு அம்சங்களை தெளிவாகக் காணலாம். நோட்டில் மகாத்மா காந்தியின் உருவப்படம் watermark ஆகவும் உள்ளது. அதே வாட்டர்மார்க் பகுதியில் 100 என்ற எண்ணும் இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற வாட்டர்மார்க் (watermark) அம்சங்கள் கள்ளநோட்டுகளை கண்டறியவதற்கான பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாகும்.
பாதுகாப்பு அம்சங்கள்
100 ரூபாய் நோட்டில் உள்ள Serial Number பகுதியில், எண்கள் இடமிருந்து வலமாகச் செல்லச் செல்ல சிறிது சிறிதாக பெரிதாகும் வகையில் அச்சிடப்பட்டிருக்கும். அதாவது, அனைத்து எண்களும் ஒரே அளவில் இருக்காது. வலதுபுறம் செல்லச் செல்ல அவற்றின் அளவு அதிகரிக்கும். இதுவும் நோட்டில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாகும்.
ஏன் லாவெண்டர் நிறத்தில் இருக்கிறது?
இது வெறும் அழகுக்காக தேர்வு செய்யப்பட்ட நிறம் அல்ல. RBI புதிய தொடர் நோட்டுகளை வடிவமைக்கும்போது ஒவ்வொரு denomination-க்கும் தனித்தனி நிற அடையாளம் கொடுத்துள்ளது. இதனால், வெவ்வேறு நோட்டுகளை நிறத்தின் மூலமாகவும் விரைவாக அடையாளம் காண முடியும்
கவர்னர் கையெழுத்து
₹100 நோட்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கவர்னரின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும். இது நோட்டின் முன்பக்கத்தில், “I promise to pay the bearer the sum of One Hundred Rupees” என்ற உறுதிமொழிக்கு கீழே காணப்படும்.
இந்த கையெழுத்து, அந்த நோட்டு RBI-யால் வெளியிடப்பட்ட சட்டப்பூர்வ பணத்தாள் என்பதைக் காட்டும் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும். கவர்னர் மாறும்போது, புதிதாக வெளியிடப்படும் நோட்டுகளில் கையெழுத்தும் மாறலாம். எனவே வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான ₹100 நோட்டுகளில் வெவ்வேறு கவர்னர்களின் கையெழுத்துகளைப் பார்க்க முடியும்.
அசோக சிங்கச் சின்னம்
100 ரூபாய் நோட்டில் வலது புறத்தில் இந்தியாவின் தேசியச் சின்னமான அசோக சிங்கச் சின்னம் (Lion Capital of Ashoka) இடம்பெற்றிருக்கும். சிங்கங்களுக்குக் கீழே “सत्यमेव जयते” (சத்யமேவ ஜயதே) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதன் பொருள் ”வாய்மையே வெல்லும்” என்பதாகும்.
நோட்டின் பின்புறத்தில் இருக்கும் தகவல்கள்
இந்த நோட்டின் மிக முக்கியமான தனிச்சிறப்பு அதன் பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான ராணி கி வாவ் (Rani Ki Vav) படம்.
ராணி கி வாவ் என்பது குஜராத்தின் பதானில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க படிக்கட்டு கிணறு(stepwell). இது இந்தியாவின் பாரம்பரிய நீர் மேலாண்மை மற்றும் கட்டிடக்கலையின் சிறப்பை பிரதிபலிக்கும் வகையில்100 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ளது. இதை யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா லோகோ
100 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் Swachh Bharat (தூய்மை இந்தியா) லோகோ இடம்பெற்றுள்ளது. இதில் கண்ணாடியுடன் “एक कदम स्वच्छता की ओर” என்ற வாசகமும் காணப்படுகிறது. இதன் பொருள், “தூய்மையை நோக்கி ஒரு அடி” என்பதாகும்.
தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த லோகோவும், வாசகமும் நோட்டில் இடம்பெற்றுள்ளன.
மொழிப் பலகை என்றால் என்ன?
100 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் மொழிப் பலகை (Language Panel) இடம்பெற்றுள்ளது. இதில் நோட்டின் மதிப்பான 100 என்பது இந்தியாவின் பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 15 இந்திய மொழிகளில் 100 என்ற மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நோட்டின் மதிப்பை பல இந்திய மொழிகளில் அறிந்துகொள்ள உதவும் பகுதியே Language Panel.
நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு
100 ரூபாய் நோட்டின் பின்புறத்தில், நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு (Year of Printing) குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த குறிப்பிட்ட நோட்டு எந்த ஆண்டில் அச்சிடப்பட்டது என்பதை அறிய இந்த ஆண்டு உதவுகிறது. அதேபோல், தேவநாகரி எழுத்தில் १०० எனவும் குறிப்பிட்டிருக்கும்.
சுவாரஸ்யமான விஷயம்
- மகாத்மா காந்தி படம்: இந்தியாவின் தேசிய வரலாற்றையும் சுதந்திரப் போராட்டத்தையும் நினைவுபடுத்துகிறது.
- ராணி கி வாவ்: இந்தியாவின் பாரம்பரியக் கட்டிடக்கலை மற்றும் கலைத்திறனைப் பிரதிபலிக்கிறது.
- மொழிப் பலகை (Language Panel): இந்தியாவின் மொழிப் பன்மையை வெளிப்படுத்துகிறது.
- அசோக சிங்கச் சின்னம் (Ashoka Emblem): இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தேசியச் சின்னமாகும்.
- Swachh Bharat லோகோ மற்றும் வாசகம்: தூய்மை தொடர்பான தேசிய இயக்கத்தைப் பிரதிபலிக்கிறது.
- வாட்டர்மார்க்: நோட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கள்ளநோட்டு தயாரிப்பைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அம்சங்கள்.
- முக்கோணம் மற்றும் கோடுகள்: பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் நோட்டின் மதிப்பை தொடு உணர்வு மூலம் அடையாளம் காண உதவும் அம்சங்கள்.
அதனால், 100 ரூபாய் நோட்டு என்பது வெறும் பரிவர்த்தனைக்கான காகிதம் அல்ல. இந்தியாவின் வரலாறு, கலாசாரம், தேசிய அடையாளம் மற்றும் நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒரே சிறிய தாளில் இணைத்துள்ள வடிவமைப்பு என்று சொல்லலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

