- Home
- Auto
- ஒரே சார்ஜில் 250 கி.மீ., கழற்றி மாட்டும் பேட்டரி.. ரூ.1.20 லட்சத்தில் களமிறங்கிய 'வி.எல்.எஃப் ஸ்ட்ரேடா' இ-ஸ்கூட்டர்!
ஒரே சார்ஜில் 250 கி.மீ., கழற்றி மாட்டும் பேட்டரி.. ரூ.1.20 லட்சத்தில் களமிறங்கிய 'வி.எல்.எஃப் ஸ்ட்ரேடா' இ-ஸ்கூட்டர்!
இந்திய இ-வாகனச் சந்தையில் நீண்ட தூரப் பயணங்களை இலக்காகக் கொண்டு ‘வி.எல்.எஃப் ஸ்ட்ரேடா’ (VLF Strada) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே சார்ஜில் 250 கி.மீ செல்லும்.

ஒரே சார்ஜில் 250 கி.மீ ரேஞ்ச்
இந்திய இ-வாகனச் சந்தையில் புதிய வரவாக ‘வி.எல்.எஃப் ஸ்ட்ரேடா’ (VLF Strada) என்ற மின்சார ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தினசரி நகரப் பயணங்களை மேற்கொள்பவர்களையும், ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என விரும்புபவர்களையும் இலக்காகக் கொண்டு மாடல் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டர் ‘சிட்டி’ (City), ‘மேக்ஸ்’ (Max) என 2 வேரியண்ட்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. முழு பேட்டரி சார்ஜில் இது அதிகபட்சமாக 250 கி.மீ வரை செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரியை ஸ்கூட்டரிலிருந்து தனியாகக் கழற்றி எடுத்துச் சென்று சார்ஜ் செய்யும் வசதி உள்ளதால், அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது அலுவலகங்களில் வெளிப்புற சார்ஜிங் வசதி இல்லாதவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
விலை & வேரியண்ட்டுகள்
வி.எல்.எஃப் ஸ்ட்ரேடா சிட்டி (City)-ல் 2.16 kWh திறன் கொண்ட ஒரு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 130 கி.மீ வரை செல்லும். இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,19,999 ஆகும். வி.எல்.எஃப் ஸ்ட்ரேடா மேக்ஸ் (Max)-ல் மொத்தம் 4.32 kWh திறன் கொண்ட இரு பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 250 கி.மீ வரை பயணிக்கும். இதன் எக்ஸ் -ஷோரூம் விலை ரூ.1,55,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக தூரம் பயணிப்பவர்களுக்கு இந்த மேக்ஸ் வேரியண்ட் சிறந்த தேர்வாக அமையும்.
முன்பதிவு & டெலிவரி
வி.எல்.எஃப் ஸ்ட்ரேடா ஸ்கூட்டருக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. சிட்டி வேரியண்ட்டிற்கு ரூ.999 புக்கிங் தொகையும், மேக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.1,999 தொகையும் செலுத்தி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். இவற்றுக்கான டெலிவரி நவம்பர் மாதம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டரி, மோட்டார் & வேகம்
வி.எல்.எஃப் ஸ்ட்ரேடா ஸ்கூட்டரில் 4.8 கிலோவாட் உச்சத் திறனையும், 34 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய பி.எல்.டி.சி (BLDC) ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கி.மீ ஆகும். பயணிகளின் வசதிக்காக இதில் 3 ரைடிங் மோடுகள் மற்றும் ரிவர்ஸ் வசதி கொடுக்கப்பட்டுள்ளன. எக்கோ (Eco) மோடு அதிகபட்ச வேகம் மணிக்கு 45 கி.மீ., சிட்டி (City) மோடில் அதிகபட்ச வேகம் மணிக்கு 65 கி.மீ, ஸ்போர்ட் (Sport) மோடில் அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கி.மீ. ஸ்கூட்டரை எளிதாகப் பின்னோக்கி நகர்த்த ரிவர்ஸ் (Reverse) வசதியும் உள்ளது.
2 வேரியண்ட்டுகளிலும் 2.16 kWh திறன் கொண்ட எல்.எஃப்.பி பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றை ஸ்கூட்டரிலேயே இணைத்து சார்ஜ் செய்ய முடியும் அல்லது தனியாகக் கழற்றி வீட்டிற்குள்ளும் சார்ஜ் செய்யலாம். ஒரு பேட்டரியை 20% முதல் 100% வரை சார்ஜ் செய்ய 3 மணி நேரம் தேவைப்படும். 2 பேட்டரிகள் கொண்ட மேக்ஸ் வேரியண்ட்டை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 6 மணி நேரம் ஆகும்.
வடிவமைப்பு & நவீன வசதிகள்
வழக்கமான ஸ்கூட்டர்களில் இருந்து மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டுள்ள ஸ்ட்ரேடாவில் பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முன்புறத்தில் டூயல் புரொஜெக்டர் எல்.இ.டி ஹெட்லைட் மற்றும் முழுமையான எல்.இ.டி விளக்குகள், காற்றைத் தடுக்கும் முன்புற விண்ட் ஷீல்டு கண்ணாடி, வசதியான இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இருக்கை (Split Seat), பின்புறத்தில் கூடுதல் லக்கேஜ் ஏற்றிச் செல்ல உதவும் லக்கேஜ் ராக், 5 இன்ச் டிஎஃப்டி (TFT) திரை, சாவியில்லா ஸ்டார்ட் (Keyless Start) வசதி, செல்போன்களை சார்ஜ் செய்ய யூஎஸ்பி டைப்-ஏ (Type-A) மற்றும் டைப்-சி (Type-C) சார்ஜிங் போர்ட்கள். இந்த ஸ்கூட்டர் கார்போனியோ பிளாக், லூனா ஒயிட், டைட்டானியோ கிரே மற்றும் உர்பானோ சில்வர் ஆகிய 4 கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கிறது.
சஸ்பென்ஷன், பிரேக்கிங் & பரிமாணங்கள்
முன்புறம் 16 இன்ச் சக்கரமும், பின்புறம் 14 அங்குல சக்கரமும் வழங்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்புறத்தில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரட்டை ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. முன்புறத்தில் 240 மி.மீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220 மி.மீ டிஸ்க் பிரேக்கும் சிபிஎஸ் (CBS - Combi Braking System) பாதுகாப்புடன் வழங்கப்பட்டுள்ளன; இதில் ஏபிஎஸ் (ABS) வசதி இடம்பெறவில்லை. சீட் உயரம் 780 மி.மீ, கிரவுண்ட் கிளியரன்ஸ் 175 மி.மீ மற்றும் ஸ்கூட்டரின் மொத்த எடை 98 கிலோ ஆகும்.
இந்திய சந்தையில் விற்பனையாகும் டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube), பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak), ஏத்தர் (Ather) மற்றும் விடா (Vida) ஆகிய முன்னணி நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு வி.எல்.எஃப் ஸ்ட்ரேடா நேரடிப் போட்டியாக அமையும். வாடிக்கையாளர்கள் விலை மட்டுமின்றி பேட்டரி திறன், நடைமுறையில் கிடைக்கும் ரேஞ்ச், சார்ஜிங் வசதி மற்றும் சர்வீஸ் மையங்களின் இருப்பை ஒப்பிட்டுத் தேர்வு செய்வது அவசியம்.

