- Home
- Auto
- Yamaha R15 V4 vs Hunter 350 vs Pulsar NS200: பயனர்கள் அதிகம் விரும்பும் 3 பைக்குகளில் எது பெஸ்ட்? முழு ஒப்பீடு!
Yamaha R15 V4 vs Hunter 350 vs Pulsar NS200: பயனர்கள் அதிகம் விரும்பும் 3 பைக்குகளில் எது பெஸ்ட்? முழு ஒப்பீடு!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் அதிகபட்ச மதிப்பீடுகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ள யமஹா ஆர்15 வி4, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்200 ஆகிய டாப் 3 பைக்குகளின் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

டாப் 3 பைக்குகள்: விலை, மைலேஜ் & சிறப்பம்சங்கள்
இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் வாடிக்கையாளர்களின் நேரடிப் பயன்பாட்டு அனுபவம் மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்துள்ள டாப் 3 சிறந்த பைக்குகளின் விவரங்களை இங்கே காண்போம். புதிய பைக் வாங்கத் திட்டமிடும் போது, வெறும் இன்ஜின் திறன் மற்றும் விலையை மட்டும் பார்க்காமல், ஏற்கனவே அந்த பைக்கை வாங்கி ஓட்டிப் பார்த்த வாடிக்கையாளர்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்வது சரியான முடிவை எடுக்கப் பெரிதும் உதவும்.
பிரபல ஆட்டோமொபைல் தளமான பைக்வாலே (BikeWale) பயனர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில், இந்தியாவிலேயே அதிக வரவேற்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ள யமஹா ஆர்15 வி4 (Yamaha R15 V4), ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்200 (Bajaj Pulsar NS200) ஆகிய 3 பைக்குகளின் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் பார்ப்போம்.
யமஹா ஆர்15 வி4 (Yamaha R15 V4)
கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கனவு பைக்காகத் திகழும் யமஹா ஆர்15 வி4, சுமார் 1,569 பயனர்களின் மதிப்பீட்டில் 5-க்கு 4.8 புள்ளிகள் பெற்று இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பந்தயக் களத்து சூப்பர்பைக் போன்ற ஆக்ரோஷமான டிசைன் மற்றும் துல்லியமான கையாளுமைக்கு இந்த பைக் பெயர்பெற்றது.
இதில் 155 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டு, சுமார் 18.1 பிஹெச்பி (bhp) பவரை வெளிப்படுத்துகிறது. ஸ்போர்ட்ஸ் பைக் என்ற போதிலும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்குச் சுமார் 46 கி.மீ வரை சான்றளிக்கப்பட்ட மைலேஜ் தருவது இதன் தனிச்சிறப்பாகும். இதன் சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ.1.76 லட்சம் ஆக உள்ளது. ஸ்டைலான ஸ்போர்ட்ஸ் பைக் மற்றும் வாடிக்கையாளர்களின் அதிகபட்ச திருப்தி வேண்டும் என்பவர்களுக்கு இது மிகச்சிறந்த தேர்வாகும்.
ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350)
கம்பீரமான தோற்றம் மற்றும் சொகுசான பயண அனுபவத்தை விரும்புபவர்களின் விருப்பமான மாடலான ராயல் என்பீல்டு ஹண்டர் 350, சுமார் 1,895 பயனர்களின் மதிப்பீட்டில் 5-க்கு 4.7 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் கச்சிதமான வடிவமைப்பு மற்றும் குறைவான இருக்கை உயரம் காரணமாக நகரத்து நெரிசலான சாலைகளிலும், வார இறுதி நெடுஞ்சாலைப் பயணங்களிலும் மிக எளிதாகக் கையாள முடியும். இதில் 349.34 சிசி பெரிய இன்ஜின் பொருத்தப்பட்டு, சுமார் 20.2 பிஹெச்பி பவரை வெளிப்படுத்துகிறது. இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்குச் சுமார் 36.2 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கிறது. இதன் சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ.1.38 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் பல்சர் என்எஸ்200 (Bajaj Pulsar NS200)
அதிக பட்ஜெட் செலவழிக்காமல் 200 சிசி பிரிவில் மிரட்டலான வேகம் மற்றும் மஸ்குலர் தோற்றத்தை விரும்பும் இளைஞர்களின் முதல் சாய்ஸ் பஜாஜ் பல்சர் என்எஸ்200 ஆகும். சுமார் 3,360 பயனர்களின் மதிப்பீட்டில் 5-க்கு 4.7 புள்ளிகளைப் பெற்று இது 3-வது இடத்தைப் பிடித்து உள்ளது. இதில் சக்திவாய்ந்த 199.5 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டு, 25.15 பிஹெச்பி என்ற அசாத்திய பவரை வாரி வழங்குகிறது. இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்குச் சுமார் 36 கி.மீ வரை மைலேஜ் தருகிறது. இதன் சராசரி எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ.1.39 லட்சம் ஆக உள்ளது. பவர் மற்றும் ஸ்ட்ரீட்ஃபைட்டர் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு இது அருமையான தேர்வாகும்.
எதைத் தேர்ந்தெடுக்கலாம்?
3 பைக்குகளுமே வாடிக்கையாளர்களிடம் மிக உயர்ந்த நன்மதிப்பைப் பெற்றிருந்தாலும், உங்களின் தேவைக்கு ஏற்பச் சரியானதைத் தேர்ந்தெடுக்கலாம். பக்கா ரேசிங் ஸ்போர்ட்ஸ் பைக் லுக் மற்றும் சிறந்த மைலேஜ் வேண்டும் என்று நினைப்பவர்கள் யமஹா ஆர்15 வி4 மாடலைத் தேர்வு செய்யலாம். கம்பீரமான ரெட்ரோ ரோட்ஸ்டர் தோற்றம் மற்றும் நிதானமான பயணம் வேண்டும் என்பவர்கள் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடலைத் தேர்வு செய்யலாம். அதே சமயம், குறைந்த பட்ஜெட்டில் அதிக வேகம் மற்றும் சக்திவாய்ந்த இன்ஜின் வேண்டும் என்று விரும்பும் இளைஞர்களுக்கு பஜாஜ் பல்சர் என்எஸ்200 மிகச்சிறந்த முதலீடாக இருக்கும்.















