வெறும் 0.81 வினாடியில் 96 கி.மீ வேகம்: காற்றில் பறந்து சாகசம் செய்யும் டெஸ்லா கார்!
டெஸ்லா நிறுவனம் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ரோட்ஸ்டர் ஸ்போர்ட்ஸ் காரின் தயாரிப்பு வடிவத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

டெஸ்லா பறக்கும் எலெக்ட்ரிக் கார்
எலக்ட்ரிக் வாகனத் துறையில் தனது அதிரடியான புதுமைகளால் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் டெஸ்லா நிறுவனம், தற்போது பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ரோட்ஸ்டர் (Roadster) காரின் தயாரிப்பு வடிவத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. எலான் மஸ்கின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் (SpaceX) தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார், வழக்கமான கார்களைப் போல சாலைகளில் செல்வதுடன், சில விநாடிகள் காற்றில் பறக்கும் அளவுக்கு மிரட்டலான திறனைக் கொண்டுள்ளது.
ராக்கெட் தொழில்நுட்பமும் அசுர வேகமும்
இந்த எலெக்ட்ரிக் காரில் சில வினாடிகள் பறக்கும் வகையில், வாயு மூலமாக உந்துவிசை பெறும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. விண்கலங்கள் மற்றும் ராக்கெட்டுகளின் திசையை மாற்றவும், வேகத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படும் இதே தொழில்நுட்பம் இப்போது இந்த காரில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
அசுர வேகம் - இதன் காரணமாக, இந்த கார் வெறும் 0.81 வினாடிகளுக்குள் மணிக்கு 0 முதல் 96 கிமீ வேகத்தை எட்டும் அசுரத்தனமான ஆற்றலைப் பெற்றுள்ளது. நெடுஞ்சாலைகளில் மின்னல் வேக முடுக்கத்தை விரும்புவோருக்கு இது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். மேலும், முழுமையான சார்ஜில் 1,000 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேம்பட்ட வடிவமைப்பு
வெறும் தரைவழி பயணத்துடன் நின்றுவிடாமல், பிரத்யேக சூழல்களில் ராக்கெட் த்ரஸ்டர்களின் உதவியுடன் கார் காற்றில் சில வினாடிகள் பறந்து செல்வதற்கும், ஸ்டண்ட் போன்ற சாகசங்களைச் செய்யும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுச் சாலைகளில் பயன்படுத்துவதற்கு இது அனுமதிக்கப்படாது. வாகனப் பிரியர்கள் மத்தியில் இந்த பறக்கும் மற்றும் ஸ்டண்ட் செய்யும் திறனுடன் கூடிய இந்த கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 விதமான மாடல்கள்
வழக்கமான எலக்ட்ரிக் கார்களை விட இதன் பேட்டரி மற்றும் மோட்டார் அமைப்புகள் முற்றிலும் மாறுபட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நெடுந்தூர பயணங்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு கைகொடுக்கும் வகையில், ஒரே சார்ஜில் மிக நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய திறன் இதில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிவேகமாக செல்லும் போது காரின் நிலைத்தன்மையை உறுதி செய்ய ஏரோடைனமிக் வடிவமைப்பு மற்றும் பிரத்யேக சஸ்பென்ஷன் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மாடல் - பறக்கும் திறன் கொண்ட ராக்கெட் த்ரஸ்டர்களுடன் கூடிய மாடலானது, சிறப்பு அழைப்பின் பேரில் தேர்ந்தெடுக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும்.
சாதாரண மாடல் - பறக்கும் திறன் இல்லாத சாதாரண வகை வேரியண்ட்டும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட உள்ளது. இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.
உற்பத்தி - கடந்த 2017ஆம் ஆண்டு கான்செப்ட் நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார், தற்போது புதிய தலைமுறை மாடலாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் உற்பத்திப் பணிகள் வரும் 2028ஆம் ஆண்டு தொடங்கும்.

