- Home
- Auto
- Top 4 EV Cars: ஒருமுறை சார்ஜ் பண்ணா போதும்! ஊர் ஊரா சுத்தலாம்! இந்திய சந்தையில் சக்கைப்போடு போடும் டாப் 4 இவி கார்கள்!
Top 4 EV Cars: ஒருமுறை சார்ஜ் பண்ணா போதும்! ஊர் ஊரா சுத்தலாம்! இந்திய சந்தையில் சக்கைப்போடு போடும் டாப் 4 இவி கார்கள்!
Auto News: வாடிக்கையாளர்களின் இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ முதல் அதிகபட்சமாக 680 கி.மீ வரை மைலேஜ் தரக்கூடிய 4 அதிரடி எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்கள் இந்திய சந்தையில் சக்கை போடு போட்டு வருகின்றனர்.

4 அதிரடி எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள்
தங்கத்தை போல் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மின்சார வாகனங்கள் (EV) பக்கம் திரும்பியுள்ளனர். முன்பு இவி கார்களை வாங்கும்போது அதன் டிசைன் மற்றும் பட்ஜெட்டை மட்டுமே பார்த்த மக்கள், இப்போது ஒரே முறை சார்ஜ் செய்தால் எத்தனை கிலோ மீட்டர் செல்லும் என்பதையே முக்கியமாக பார்க்கின்றனர். வாடிக்கையாளர்களின் இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ முதல் அதிகபட்சமாக 680 கி.மீ வரை மைலேஜ் தரக்கூடிய 4 அதிரடி எலக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) மாடல்கள் இந்திய சந்தையில் சக்கை போடு போட்டு வருகின்றனர்.
மஹிந்திரா BE 6 (Mahindra BE6)
தற்போது இந்திய சந்தையில் அதிக தூரம் பயணிக்கக்கூடிய எலக்ட்ரிக் எஸ்யூவி என்ற பெருமை மஹிந்திராவின் BE 6 மாடலுக்கு உண்டு. இது 59kWh மற்றும் 79kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. சுமார் 682 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் திறனை வழங்குகிறது. 286 ஹார்ஸ்பவர் ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ரியர்-வீல் டிரைவ் (RWD) சிஸ்டத்துடன் வரும் இந்த கார், லாங் ட்ரிப் செல்பவர்களுக்கான சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா XEV 9e (Mahindra XEV 9e)
அடிக்கடி நீண்ட தூரம் பயணிக்கும் பிரியர்களுக்காகவும், சொகுசான பயணத்தை விரும்புபவர்களுக்காகவும் மஹிந்திரா நிறுவனம் இந்த பிரீமியம் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவும் 59kWh மற்றும் 79kWh பேட்டரி பேக்குகளுடன், 286 hp பவருடன் வருகிறது. இதன் பெரிய பேட்டரி மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 656 கிலோமீட்டர் வரை ஓடும். பிரீமியம் லுக் மற்றும் சொகுசு வசதிகளுடன் அதிக மைலேஜ் தரும் மாடலாக இது சந்தையில் களம் காண்கிறது.
டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV)
டாடா மோட்டார்ஸின் ரஃப்பான 'ஹாரியர்' காரின் எலக்ட்ரிக் அவதாரம் இது. செயல்திறனில் சமரசம் செய்யாதவர்களுக்கான மிகச்சிறந்த கார். இதில் 75kWh திறன் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த எஸ்யூவி 627 கி.மீ வரை மைலேஜ் தரும். ரியர்-வீல் மற்றும் ஆல்-வீல் டிரைவ் (AWD) ஆப்ஷன்களில் வரும் இந்த கார், வெறும் 6.3 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டி அசத்துகிறது. நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய திறனை விரும்புவர்களுக்கு இந்த எஸ்யூவி மிகவும் பொருத்தமானது.
மாருதி இ-விதாரா (Maruti e-Vitara)
மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவியான 'இ-விதாரா', நடுத்தர குடும்பங்கள் மற்றும் தினசரி ஆபீஸ் செல்பவர்களுக்காவே வடிவமைக்கப்பட்டுள்ளது. 49kWh மற்றும் 61kWh பேட்டரி தேர்வுகள் உள்ளன. இதில் உலகப் புகழ்பெற்ற BYD நிறுவனத்தின் பாதுகாப்பான 'LFP பிளேட் பேட்டரி' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் 61kWh பெரிய பேட்டரி பேக், ஒரே சார்ஜில் சுமார் 543 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் திறனைத் தருகிறது. நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் மாருதியின் அசாத்திய பாதுகாப்பு வசதிகள் இதன் கூடுதல் பலம்.

