மினி ஸ்கார்பியோ டூ எலெக்ட்ரிக் தார் வரை: ரகரகமாய் 6 எஸ்யூவிகளை களமிறக்கும் மஹிந்திரா!
மினி ஸ்கார்பியோ, எலெக்ட்ரிக் தார் முதல் பிக்கப் டிரக் வரை, சந்தையைக் கலக்க வரும் மஹிந்திராவின் புதிய எஸ்யூவி கார்கள், நகர்ப்புறப் பயன்பாடு, மற்றும் எலெக்ட்ரிக் வாகனப் பிரிவுகளில் சந்தையைக் கைப்பற்ற மஹிந்திரா தீவிரமாக இறங்கியுள்ளது.

எஸ்யூவிகளை வரிசைக்கட்டும் மஹிந்திரா
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது எஸ்யூவி (SUV) விற்பனையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், ரகரகமாய் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருகிறது. இதில் ஸ்கார்பியோ வடிவமைப்பில் உருவாகும் மினி எஸ்யூவி, எலெக்ட்ரிக் தார் மற்றும் பிரீமியம் மின்சார எஸ்யூவியான பிஇ.07 ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த மாடல்கள் தொடர்பான சாலை சோதனைத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றின் வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் அறிமுகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பல புதிய எஸ்யூவி மாடல்களை கேப் விடாமல் ஒவ்வொரு செக்மென்ட்டிலும் நிலைநிறுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. மஹிந்திரா நிறுவனம் ஏற்கெனவே ஸ்கார்பியோ என், ஸ்கார்பியோ கிளாசிக், தார் ராக்ஸ், எக்ஸ்யூவி 3XO, எக்ஸ்யூவி 7XO உள்ளிட்ட பல்வேறு எஸ்யூவிகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், நகர்ப்புறப் பயன்பாடு முதல் சாகசப் பயணங்கள் மற்றும் பிரீமியம் மின்சாரக் கார்கள் வரை பல்வேறு பிரிவுகளில் தனது தயாரிப்புகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
மஹிந்திரா விஷன் எஸ் (Vision S)
மினி ஸ்கார்பியோ போன்ற தோற்றத்துடன் உருவாகும் இந்த எஸ்யூவி, நான்கு மீட்டருக்கும் குறைவான நீளத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய NU_IQ தளத்தில் உருவாகும் இந்தக் காரில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எஞ்சின் தேர்வுகள் இடம்பெற வாய்ப்புள்ளது. இதன் தயாரிப்பு நிலை மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மஹிந்திரா விஷன் டி (Vision T)
தார் குடும்பத்தின் வடிவமைப்பு அடையாளங்களைக் கொண்ட விஷன் டி கான்செப்ட், எதிர்கால மின்சார எஸ்யூவிக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதன் தயாரிப்பு மாடல் 5 கதவுகளுடன், முழுமையான மின்சாரத் தொழில்நுட்பத்தில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பேட்டரி திறன், பயணிக்கும் தூரம் மற்றும் விலை குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
மஹிந்திரா BE.07
பிரீமியம் மின்சார எஸ்யூவி பிரிவில் அறிமுகமாகவுள்ள இந்த மாடல், குடும்பப் பயன்பாட்டுக்கு ஏற்ற இடவசதியையும் நவீன தொழில்நுட்பங்களையும் கொண்டிருக்கலாம். மூன்று திரைகள் கொண்ட டேஷ்போர்டு, பெரிய கண்ணாடிக் கூரை மற்றும் மேம்பட்ட ஓட்டுனர் உதவி வசதிகள் இடம்பெற வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.
மஹிந்திரா விஷன் எக்ஸ் (Vision X)
புதிய NU_IQ தளத்தில் உருவாக்கப்படும் மற்றொரு புதிய எஸ்யூவி விஷன் எக்ஸ் கார். எதிர்காலத்தில் நகர்ப்புறப் பயன்பாட்டுக்கும் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற மாடலாக இது உருவாகலாம். இதன் தயாரிப்பு நிலை வடிவமைப்பு, இன்ஜின் தேர்வுகள் மற்றும் அறிமுகத் தேதி குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 2028ம் ஆண்டு இந்த மாடல் அறிமுகமாக வாய்ப்புள்ளது.
மஹிந்திரா விஷன் எஸ்எக்ஸ்டி (Vision SXT)
எஸ்யூவி மற்றும் பிக்கப் வாகனங்களின் வடிவமைப்பு அம்சங்களை இணைக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் இது. வலுவான வெளிப்புறத் தோற்றம் மற்றும் சாகசப் பயணங்களுக்கு ஏற்ற வடிவமைப்பு இதன் முக்கிய அடையாளங்களாக உள்ளன.
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர்
ஸ்கார்பியோ பெயரில் உருவாகும் இந்தப் புதிய பிக்கப் வாகனத்தை இந்தியாவில் 2027 ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான பயன்பாட்டுடன், குடும்பப் பயணங்களுக்கும், சாகசங்களுக்கும் ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.19.79 லட்சத்தில் இந்த பிக்கப் டிரக் வர இருக்கிறது.

