- Home
- Auto
- மாருதி சுஸுகி படைத்த மாஸ் சாதனை! அடேங்கப்பா... ஒரே ஆண்டில் இத்தனை லட்சம் கார்களை உற்பத்தி செய்ததா?
மாருதி சுஸுகி படைத்த மாஸ் சாதனை! அடேங்கப்பா... ஒரே ஆண்டில் இத்தனை லட்சம் கார்களை உற்பத்தி செய்ததா?
2025-26 நிதி ஆண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் 23.4 லட்சம் கார்களை உற்பத்தி செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இதுவே நிறுவனத்தின் ஒரு வருடத்திய அதிகபட்ச உற்பத்தியாகும்.

Maruti Suzuki Record
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், 2025-26 நிதி ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, 23.4 லட்சம் கார்களை உற்பத்தி செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகளவில் உள்ள சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷனின் தொழிற்சாலைகளில், இந்த உற்பத்தி அளவை எட்டிய ஒரே நிறுவனம் மாருதி சுஸுகி தான். இந்த ஆண்டில் டிசையர், ஃபிராங்க்ஸ், ஸ்விஃப்ட், எர்டிகா மற்றும் பலேனோ ஆகிய ஐந்து மாடல்கள் தலா 2 லட்சம் யூனிட்களுக்கு மேல் விற்பனையாகி, டாப் 5 மாடல்களாக உள்ளன.
சாதனை படைத்த மாருதி சுஸுகி
இது குறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஹிசாஷி டேக்யூச்சி பேசும்போது, "இது எங்களுக்கு மிகவும் பெருமையான தருணம். உலக அளவில் சில நிறுவனங்கள் மட்டுமே ஒரே நாட்டில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கார்களை உற்பத்தி செய்துள்ளன. வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ற தயாரிப்புகளையும் தொழில்நுட்பங்களையும் வழங்குவதில் மாருதி சுஸுகி எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது. அதன் மூலம் தலைமுறை தலைமுறையாக அவர்களின் நம்பிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம். இந்த சாதனை, கடந்த நாலரை தசாப்தங்களாக நாங்கள் கவனமாக உருவாக்கிய ஆட்டோமொபைல் சூழலின் விளைவாகும்," என்று கூறினார்.
அடுத்த டார்கெட்
டேக்யூச்சி மேலும் கூறுகையில், "இந்தியாவின் வளர்ச்சி மீது எங்கள் தாய் நிறுவனமான சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் வைத்துள்ள வலுவான நம்பிக்கை, மற்றும் இந்தியாவை ஒரு ஏற்றுமதி மையமாக வளர்ப்பதில் காட்டப்படும் கூடுதல் கவனம் ஆகியவை, எங்கள் உற்பத்தித் திறனை மேலும் விரிவுபடுத்த உதவுகிறது. எங்கள் உற்பத்தித் திறனை ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் யூனிட்டுகளாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்," என்றார். தற்போது, மாருதி சுஸுகி நிறுவனம் ஹரியானாவில் உள்ள குருகிராம் மற்றும் கர்கோடா, குஜராத்தில் உள்ள ஹன்சல்பூர் ஆகிய இடங்களில் உற்பத்தி ஆலைகளை இயக்கி வருகிறது. இவற்றின் மொத்த நிறுவப்பட்ட உற்பத்தித் திறன் ஆண்டுக்கு சுமார் 24 லட்சம் யூனிட்கள் ஆகும்.
650 வேரியன்ட்
தங்களது விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, குஜராத்தின் சனந்தில் உள்ள கோராஜ் தொழிற்பேட்டையில் ஐந்தாவது உற்பத்தி ஆலைக்கான நிலத்தை நிறுவனம் மார்ச் 2026-ல் தேர்வு செய்தது. இந்த ஆலை முழுமையாகச் செயல்படத் தொடங்கியதும், அதன் ஆண்டு உற்பத்தித் திறன் 10 லட்சம் யூனிட்டுகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்காக, நிறுவனம் தற்போது 17 மாடல்களில் 650-க்கும் மேற்பட்ட வேரியன்ட்களை உற்பத்தி செய்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

