வெறும் ரூ.20க்கு 100 கிமீ மைலேஜ்: நாடு முழுவதும் எகிறும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை
எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்து வருகிறது.
Electric Scooter
உலகம் முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தற்போது வரை மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனையில் சீனா தான் முன்னிலையில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் உள்ளது. ஆனால், விரைவில் இந்தியா முதல் இடத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூற்றை நிறைவேற்றும் விதமாக நாட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன.
கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 11 லட்சத்து 21 ஆயிரத்து 821 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்தில் மட்டும் 71,626 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிவிஎஸ், ஓலா, ஏதர், பஜாஜ், சேடக், விடா போன்ற பல நிறுவனங்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் உள்ளது.
இந்தியாவில் புதிய பைக்குகள் ஆன்ரோடுக்கு வரும் போது பெட்ரோல் பைக்குகளை விடவும், எலக்ட்ரிக் பைக்குகளின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. ஆனால் எலக்ட்ரிக் பைக்குகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன. மேலும் பெட்ரோல் பைக்குகளைக் கணக்கில் கொண்டால் எலக்ட்ரிக் பைக்குகள் அதிக மைலேஜ் வழங்குகின்றன. இதனால் வாடிக்கையாளர்களின் தேர்வும் எலக்ட்ரிக் பைக்குகளை நாடியே செல்கிறது.
எலக்ட்ரிக் பைக்குகள் ஒருமுறை சார்ஜ் செய்தால் சராசரியாக 100 கிமீ ஓடும். 100 கிமீ.க்கு சார்ஜ் ஏற்ற வேண்டும் என்றால் சுமார் 4 யூனிட் மின்சாரம் செலவாகும். ஒரு யூனிட் மின்சாரம் ரூ.5 என்று வைத்துக் கொண்டால் 4 யூனிட் மின்சாரத்திற்கு ரூ.20 செலவாகும். அதே வேலையில் பெட்ரோல் பைக்காக இருந்தால் 100 கிமீ பயணம் செய்ய ரூ.150 முதல் ரூ.200 வரை பெட்ரோலுக்காக செலவிட வேண்டும். இதனைக் கணக்கில் கொண்டு மின்சார வாகனங்களுக்கான டிமேன்ட் அதிகரித்துள்ளது.