விற்பனையில் தள்ளுபடி இல்லை.. இருந்தாலும் அக்டோபரில் ஹூண்டாய் கண்ட ‘டபுள்’ வளர்ச்சி
ஹூண்டாய் இந்தியாவின் அக்டோபர் 2025 விற்பனை அறிக்கை, மொத்தமாக 53,792 யூனிட்கள் விற்பனையானதைக் காட்டுகிறது.

ஹூண்டாய் அக்டோபர் விற்பனை
ஹூண்டாய் இந்தியாவின் அக்டோபர் 2025 விற்பனை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நிறுவனம் தற்போது 10 மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது, இதில் இரண்டு எலக்ட்ரிக் வாகனங்களும் இடம்பெற்றுள்ளன. வழக்கம் போல, கிரெட்டா மீண்டும் நிறுவனத்தின் ‘நம்பர் 1’ விற்பனையாகும் எஸ்யூவி. வென்யூ மற்றும் எக்ஸ்டரும் விற்பனையில் நல்ல வளர்ச்சியைக் காட்டியுள்ளன. அக்டோபரில் ஹூண்டாய் மொத்தம் 53,792 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. செப்டம்பரில் அது 51,547 ஆக இருந்தது. சில மாடல்கள் குறிப்பாக வெர்னா, டூஸான், அயோனிக் 5 1,000 யூனிட்டுகளுக்கும் குறைவாக மட்டுமே விற்பனையாகியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
வென்யூ விற்பனை
SUV பிரிவில் கிரெட்டா 18,381 யூனிட்களுடன் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. செப்டம்பரில் 18,861 யூனிட்கள், ஆகஸ்டில் 15,924 யூனிட்கள் விற்பனையாகியிருந்தன. வென்யூ அக்டோபரில் 11,738 யூனிட்கள் விற்பனையாகி, செப்டம்பரின் 11,484 எண்ணிக்கையை விட உயர்ந்துள்ளது. எக்ஸ்டர் 6,294 யூனிட்கள் விற்பனையாகி தொடர்ந்து நல்ல நிலையைப் பேணியது. இதேபோல், ஆரா 5,815 யூனிட்களுடன், கிராண்ட் i10 நியோஸ் 5,426 யூனிட்களுடன், i20 மாடல் 4,023 யூனிட்களுடன் நிலையான பிரிவுகளில் விற்பனையைப் பதிவு செய்தன. அல்காசரும் 1,259 யூனிட்களுடன் மெதுவான ஆனால் நிலையான செயல்பாட்டைக் காட்டியது.
ஹூண்டாய் இந்தியா ரிப்போர்ட்
செடான் மற்றும் ப்ரீமியம் மாடல்களில் வெர்னா 824 யூனிட்கள், டூசான் 26 யூனிட்கள், அயோனிக் 5 வெறும் 6 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகின. இந்த மூன்று மாடல்களும் ஒருமாதத்திற்குள் 1,000 யூனிட்களை அடையவில்லை. இருந்தாலும், ஹூண்டாய் மொத்த விற்பனை தொடர்ச்சியாக உயர்வைப் பதிவு செய்து வருகிறது ஆகஸ்டில் 44,001 யூனிட்கள் → செப்டம்பரில் 51,547 → அக்டோபரில் 53,792 யூனிட்கள் என வளர்ச்சி காணப்பட்டுள்ளது. கிரெட்டா, வென்யூ, எக்ஸ்டர் போன்ற SUV-களின் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே இந்த வளர்ச்சிக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.