- Home
- Auto
- Car Safety Tips: மழைநீரில் மூழ்கிய காருக்கு இன்சூரன்ஸ் கிளைம் செய்வது எப்படி? காரை பாதுகாப்பது எப்படி?
Car Safety Tips: மழைநீரில் மூழ்கிய காருக்கு இன்சூரன்ஸ் கிளைம் செய்வது எப்படி? காரை பாதுகாப்பது எப்படி?
Car Safety Tips: பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வெள்ளத்தில் கார் சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? இன்சூரன்ஸ் கிளைம் செய்வது எப்படி? என இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

மழைநீரில் மூழ்கிய காரை காப்பாற்ற சூப்பர் டிப்ஸ்
தமிழ்நாட்டில் பருவமழை பொய்யத் தொடங்கியுள்ளது. சுமார் 3 மணி நேரம் பெய்த கனமழைக்கே சென்னையின் சில இடங்களில் தண்னீர் தேங்கியது. மழைக்காலங்களில் சுரங்கப்பாதைகளில் அல்லது வெள்ளம் சூழ்ந்த இடங்களில் கார் நீரில் மூழ்க அதிக வாய்ப்புள்ளது. கார் மூழ்கும் போது இன்ஜின், எலக்ட்ரிக் சர்க்யூட் மற்றும் காரின் உள்பகுதி ஆகியவை பாதிக்கப்படலாம்.
காரின் டயர் பாதி அளவு வரை நீரில் இருந்தால் அச்சப்படத் தேவையில்லை. மாறாக, டயரைத் தாண்டி நீர் உயர்ந்தாலோ அல்லது காரின் தரைப்பகுதிக்கு நீர் வந்தாலோ சிக்கல் உண்டாகும். அத்தகைய தருணங்களில் என்னென்ன வழிகளை பின்பற்ற வேண்டும் என விரிவாக பார்க்கலாம்.
காரை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்காதீர்கள்
நீரில் மூழ்கிய காரை ஸ்டார்ட் செய்தால் சரிசெய்ய முடியாத அளவுக்கு பெரிய சேதம் ஏற்பட்டுவிடும். காரை அப்படியே டோ (Tow) செய்து மெக்கானிக்கிடம் அல்லது சேவை மையத்திற்கு கொண்டு செல்வதே உகந்தது. கார் எந்த அளவுக்கு நீரில் மூழ்கியுள்ளது என்பதைச் சரிபார்க்கவும்.
சேறும் நீரும் படிந்த அடையாளங்கள் காரின் உள்ளேயும் வெளியேயும் இருக்கும். கதவின் அடிப்பகுதிக்கு மேல் நீர் வரவில்லை எனில், உங்கள் கார் ஓரளவுக்கு நல்ல நிலையில் உள்ளது என்று அர்த்தம். டேஷ்போர்டு வரை நீர் புகுந்திருந்தால், காருக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கணக்கிடும்.
இன்சூரன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்
வெள்ளத்தில் கார் சேதமடைந்தால், அது காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் (Comprehensive Insurance) பாதுகாப்புக்குள் வந்துவிடும். எனவே பழுதுபார்ப்பதற்கோ அல்லது மாற்றுவதற்கோ நீங்கள் கோரிக்கை சமர்ப்பிக்கலாம். இக்காலக்கட்டத்தில் பலர் கோரிக்கை வைப்பார்கள் என்பதால், விரைவாகவே வழிமுறைகளைத் தொடங்கவும்.
காரின் உள்பகுதியை உலர வைக்கத் தொடங்கவும்
காருக்குள் நீர் நுழைந்தால், அது காய்ந்த பின்னரும் விரைவில் பூஞ்சை உருவாகிவிடும். கதவுகள் மற்றும் கண்ணாடிகளைத் திறந்து வைக்கவும். நீரை உறிஞ்சும் வகையில் தரையில் காய்ந்த துண்டுகளைப் பரப்பவும். எனினும் கார்பெட், மேட், டோர் பேனல், சீட் கவர் போன்ற ஈரமான பொருட்களை நீங்களே மாற்ற வேண்டாம். இவை உங்கள் இன்சூரன்ஸில் கவர் செய்யப்பட வாய்ப்புள்ளது.
ஃபியூயல், ஆயில் மற்றும் ஏர் கிளீனரைச் சரிபார்க்கவும்
டிப்ஸ்டிக்கில் நீர் துளிகள் இருந்தாலோ, ஃபியூயல் அளவு அதிகரித்திருந்தாலோ அல்லது ஏர் ஃபில்டரில் நீர் இருந்தாலோ இன்ஜினை ஒருபோதும் ஸ்டார்ட் செய்யக்கூடாது. நீரை வெளியேற்றவும், ஆயில் மாற்றவும் மெக்கானிக்கிடம் கொண்டு செல்லவும்.
புதிய மாடல் கார்களில் ஃபியூயல் சிஸ்டம் சீல் செய்யப்பட்டிருக்கும். எனினும் பழைய கார்களில் ஃபியூயல் சிஸ்டத்தை ட்ரைன் செய்ய வேண்டியிருக்கும். பிரேக், கிளட்ச், பவர் ஸ்டீயரிங் மற்றும் கூலன்ட் சிஸ்டம் அனைத்திலும் நீர் கலக்கப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்க வேண்டும்.
எலெக்ட்ரிக் சர்க்யூட்களையும் சரிபார்க்கவும்
ஹெட்லைட், இண்டிகேட்டர், ஏசி, ஸ்டீரியோ, பவர் லாக், விண்டோஸ், சீட் மற்றும் உட்புற விளக்குகள் அனைத்தையும் பரிசோதிக்கவும். கார் செல்லும் விதத்திலோ அல்லது கியர் மாற்றுவதிலோ சிறிய மாற்றம் தெரிந்தாலும் அது சர்க்யூட் கோளாறாக இருக்கலாம். காரை மெக்கானிக்கிடம் கொண்டு செல்லவும். இந்தச் சேதமும் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படும்.
டயர், பிரேக் மற்றும் காரின் அடிப்பகுதியைச் சரிபார்க்கவும்
காரை இயக்க முயற்சிப்பதற்கு முன்பு இவை அனைத்தும் சரியாக உள்ளதா எனப் பார்க்கவும். முக்கியமாக பார்க்கிங் பிரேக்கை சரிபார்க்கவும். சந்தேகம் இருப்பின் காரை டோ செய்யவும். வெள்ளத்தில் சிக்கிய கார், மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் கூட சிக்கல்களைத் தரக்கூடும். பழுதுபார்ப்புச் செலவு மிகவும் அதிகமாகும் எனத் தோன்றினால், காரை மாற்றுவதற்கு முன்னுரிமை வழங்கவும். இது பிற்காலத்தில் வரக்கூடிய பெரிய தலைவலியிலிருந்து உங்களை விடுவிக்கும்.








